இணையத்தில் கலக்கும் நடிகர் நடிகைகளின் நகல்கள்

சீனா - இந்தியா எல்லைப் பிரச்னைகளைத் தொடர்ந்து இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த பட்டியலில் ‘டிக் டாக்’ செயலியின் பெயரும் இடம்பெற்றிருந்தது லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களை கவலையில் ஆழ்த்தி விட்டது. தடை செய்யப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் டிக் டாக்கில் பிரபலமான பல வீடியோக்களும் ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் தொடர்ந்து உலா வந்துகொண்டு தான் இருக்கின்றன.
பிரபல திரை நட்சத்திரங்களின் உருவ தோற்றம், முக அமைப்புடன் வீடியோ வெளியிட்டு சில டிக் டாக் திறமையாளர்கள் இணையத்தில் பிரபலமடைந்தனர். அத்தகைய வீடியோக்களை பலரும் இன்றும் தேடிப் பார்த்து வருகின்றனர். நடிகர் நடிகைகளின் நகல்கள் போன்று காட்சியளிக்கும் சில திறமையாளர்கள் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூரி, மன்சூர் அலிகான், ஹரீஷ் கல்யாண், சூர்யா, ஹிப் ஹாப் ஆதி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, செளந்தர்யா, நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா, ‘சின்னத்தம்பி’ குஷ்பு, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா, ‘சிட்டிசன்’ பட கதாநாயகி வசுந்தரா தாஸ், ‘கருப்பன்’ திரைப்படத்தின் நாயகி தான்யா ரவிச்சந்திரன், விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்த அனிகா என்று பிரபல நட்சத்திரங்களின் உருவத் தோற்றத்துடன் இருக்கும் நபர்களின் வீடியோ அனைவரையும் வியக்க வைத்ததுடன், குழப்பமடையவும் செய்துள்ளது. இது போன்ற சுவாரஸ்யம் மிக்க வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
இத்தகைய ஏராளமான வீடியோக்களைத் தங்களுக்கு அளித்து மகிழ்வித்த டிக் டாக் செயலி பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடி, மீண்டு வராதா? அல்லது அதே போன்றதொரு தளம் மீண்டும் கிடைக்காதா என்று அதன் பயனாளர்கள் பலரும் ஏங்கி வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.