காவல் நிலையத்திற்குச் சென்ற பெண் மரணம்

திருவண்ணாமலையில் மகன் மீது வழக்குப் பதிவு செய்ததால் விரக்தியடைந்த பெண் ஒருவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தர்மலிங்கம் இருவரும் சகோதரர்கள். இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வரும் நிலையில், இவர்களுக்கிடையே நிலத்தகராறும் இருந்துவந்துள்ளது. ஆறுமுகம் மனைவி மகேஸ்வரிக்கும், தர்மலிங்கம் மனைவி சுதர்சனாவுக்கும் எப்போதும் வாய் சண்டை நடப்பது வழக்கம். ஜூலை 6 ஆம் தேதி இரு குடும்பத்தாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தர்மலிங்கமும் அவரது இரண்டாவது மகன் விஜயராஜனும் சேர்ந்து, ஆறுமுகத்தை ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஆறுமுகத்தை மருத்துவமனையில் சேர்த்த அவரது மனைவி மகேஸ்வரி, தர்மலிங்கம், விஜயராஜன் அப்பா மகன் இருவர் மீதும் மேல் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இருவரும் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து (குற்ற எண் 2034/2020 ) கைது செய்தனர் செங்கம் காவல் துறையினர்.
இந்த நிலையில்தான் தர்மலிங்கம் மனைவி சுதர்சனா, தன்னுடைய மகன் மீது வழக்குப் போட்டு படிப்பை பாழாக்கிவிட்டார்கள் என்ற கோபத்தில், தோட்டத்திற்குச் சென்று அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டார். அங்கிருந்து மருத்துவமனை செல்லாமல் நேராக காவல் நிலையம் சென்றுள்ளார் சுதர்சனா.
நிலைமை தீவிரமடையவே செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுதர்சனா, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனில்லாமல் 13 ஆம் தேதி காலையில் இறந்துவிட்டார். தகவலறிந்த சுதர்சனாவின் உறவினர்கள், எஸ்.ஐ இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவுசெய்தால்தான் உடலை வாங்குவோம் என்று போராட்டத்தில் குதித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி அரவிந்தன், “ எஸ்.பி.யாக பொறுப்பேற்று ஒரு நாள்தான் ஆகிறது. எனக்கு அவகாசம் கொடுங்கள், புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். தற்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் உடலை எடுத்துச் செல்லுங்கள்” என்று பேசியதையடுத்து, உடலைப் பெற்றுக்கொண்டனர்.
இதுதொடர்பாக எஸ்.பி அரவிந்தனை தொடர்புகொண்டு பேசினோம்...
“இறந்துபோன சுதர்சனா, 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கு வயலில் உள்ள விஷச் செடியை அரைத்துக் குடித்துள்ளார். அங்கிருந்து மருத்துவமனைக்குப் போகாமல், 2 கிமீ தூரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு மதியம் 12.00 மணிக்கு சென்றுள்ளார். அங்கு நிதானமாக நிற்க முடியாத நிலையில், காவல் நிலையத்தின் கேட்டை பிடித்து ஆட்டி என் பிள்ளையும் கணவரையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்களா...உங்களை சும்மா விடமாட்டேன். நான் இங்கே சாகப்போகிறேன் என்று பேசியுள்ளார்.
அவரிடம் பேசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். உண்மையைத் திரித்து காவல் நிலையத்திற்குள் விஷம் குடித்து இறந்துவிட்டதாக பொய் செய்திகள் பரப்புவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
வணங்காமுடி
Blogger இயக்குவது.