முஸ்லீம் மக்களின் எதிரி ராஜபக்ச குடும்பமே!!
இலங்கையில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாக ராஜபக்சக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது.” என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத் ஸாலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளை ஆட்சிக்கு வருவதற்குப் பயன்படுத்திய ராஜபக்சவினர், அதிகாரத்தில் இருக்கும் காலத்திலாவது பயங்கரவாதிகளைக் கைது செய்யவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காகத்தான் இன்று ராஜபக்சக்கள், முஸ்லிம்களைத் துரத்தி துரத்தி நெருக்குவாரங்கள் கொடுக்கின்றனர். இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் தைரியம் இவர்களுடனுள்ள முஸ்லிம் மொட்டுக்களுக்கு இல்லை.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மட்டுமல்ல, அவர்களது உறவினர்களின் ஜனாஸாக்களையும் இங்குள்ள சட்டத்தரணிகள், சகபாடிகளால் நெருப்பிலிருந்து பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த இலட்சணத்தில் முஸ்லிம் விரோதிகளிடமிருந்து, எமது சமூகத்தை இந்த முஸ்லிம் மொட்டுக்காரர்களால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?
சமூகத்துக்காகப் பதவிகளைப் பொருட்படுத்தாது நான்கு தடவைகள் இராஜிநாமாச் செய்தவன் நான். ஆட்சி, அதிகாரங்களை அல்லாஹ்தான் தருகிறான் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் சண்டையிட்டுத்தான் மஹிந்தவை விட்டு நான் வெளியேறினேன். தம்புள்ளை பள்ளிவாசலை சில காடையர்கள் உடைக்க வந்தபோது, மஹிந்த ராஜபக்சவிடம் நான் எடுத்துரைத்த வேளை, “முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் கட்டுவதுதான் வேலை” என்று என்னிடம் சீறிப்பாய்ந்த அவர், அது புதிதாகக் கட்டப்பட்டது என்றார்.
இது பற்றி அமைச்சர் ஜனக பண்டாரவிடம் கேட்டதற்கு, “68 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் அது” என விளக்கியபோதுதான், மஹிந்தவின் பொய்கள் பற்றித் தெரிந்தது. மறுகணமே நான், அவரது கட்சியிலிருந்து விலகிக் கொண்டேன்.
இவ்வாறானவர்கள் 2005 முதல் இன்று வரை முஸ்லிம்களின் எதிரியாகவே உள்ளனர். முஸ்லிம் ஒருவரை இவர்கள் புதிய அரசில் அமைச்சராக்கவும் இல்லை. இந்தநிலையில், இவர்களுடன் ஒட்டிக்கொண்ட முஸ்லிம் மொட்டுக்கள், இன்று வந்து ராஜபக்சக்களுக்காக வாக்குக் கேட்பதற்கு வெட்கம் இல்லையா? வட்டிலப்பமும், பிரியாணியும், வாக்குகளும் தருவதற்கு முஸ்லிம்கள் தயாராகவுள்ளனர் என்று மஹிந்த சொல்கின்றாரே… எதற்காக?
தேசியப் பட்டியலுக்காக ராஜபக்சக்களின் கொடுமைகளை மறக்குமாறு கோரும் இந்த முஸ்லிம் மொட்டுக் கோமாக்காரர்கள், ராஜபக்சக்கள் எம்மை அழித்தபோது, எரித்தபோது எங்கிருந்தனர்?
நல்லாட்சி அரசு தனது குடும்பத்தையே பழிவாங்கியதாக இன்று நாமல் ராஜபக்ச கண்ணீர் வடிக்கின்றார். கள்வர்களைக் கைதுசெய்யாமல் கைகட்டி நிற்கவா சொல்கின்றார். எனவே, இவர்களுக்குப் பாடம் புகட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னமான தொலைபேசிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo