நாங்கள் அவதானமாகவே இருக்கிறோம் சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு பதில்!

  நாங்கள் அவதானமாகவே இருக்கிறோம் சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு பதில்!

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.


சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து கஜேந்திரகுமார் சபையில் உரையாற்றுகையில், “சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன்.


அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.


ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.


இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.


வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.


பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.


32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்தார். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.