சுமனரத்ன தேரர் இனக்கலவரம் தூண்டும் விதமாக செயற்படுகிறார்!

 

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

“கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக இந்த மதகுரு ஒரு வன்முறையாளராக நடந்துகொள்ளும் நிலையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுகின்ற பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பன்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இனங்காணப்பட்ட தொல்லியல் தொடர்பான ஒரு இடத்தில் பௌத்த மதகுரு ஒருவரால் நேற்று அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

பன்குடாவெளி பகுதியில் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையில் பல மதகுருக்கள் உள்ளனர். பௌத்த மதகுருக்களில் சிறந்த பல மதகுருக்கள் உள்ளனர். ஆனால் இந்த மதகுருவைப்பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளில் ஒரு வன்முறையினை பிரயோகிப்பதன் ஊடாக ஒரு இனக்கலவரத்தினை தூண்டும் வகையில் சிங்க மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

இந்த மதகுருவானவர் வன்முறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம். பௌத்த மதத்தில் உள்ள இவ்வாறான மதகுருக்களின் மூலம் வன்முறைகளில் ஈடுபடும் செற்பாடுகளை கடந்த ஐந்து வருடமாக முன்னெடுத்துவரும் நிலையில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கவேண்டிய பொலிஸார் எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.” – என்றார்.

Blogger இயக்குவது.