தொடர்கின்றது கலிபோர்னிய காட்டுத்தீயின் பேரழிவு!


 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். இதன்காரணமாக மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது.

ஆனால் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு கலிபோர்னியாவில் தற்போது காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கலிபோர்னியா மாகாணத்தில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கலிபோர்னியாவின் வடக்குப்பகுதியில் உள்ள நாபா பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென புதிதாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

முதலில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்த நெருப்பு அடுத்த சில மணி நேரங்களில் 4 மடங்காக கொழுந்து விட்டு எரிவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“கிளாஸ் பயர்“ என பெயரிடப்பட்டுள்ள இந்த நெருப்பு மேலும் தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதால் அதனை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அத்துடன், நாபா பள்ளத்தாக்கு, கலிஸ்டோகா பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் சோனோமா மற்றும் நாபா மாவட்டங்களில் உள்ள சாண்டா ரோசா மற்றும் செயின்ட் ஹெலினாவில் வசிக்கும் மக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 68 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாபா பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் இந்த காட்டுத்தீயில் சிக்கி மாயமாகியுள்ளனர். கலிபோர்னியாவில் நடப்பாண்டு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 37 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

மேலும் காட்டுத்தீயால் கலிபோர்னியா மாகாணத்தில் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.


Blogger இயக்குவது.