எஸ்பிபி உடல் நல்லடக்கம்: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!
மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் இன்று (செப்டம்பர் 26) காலை 11 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, மழையையும், வைரஸ் தொற்று அச்சத்தையும் கூட பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
ரசிகர்களின் கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அங்கிருந்து எஸ்பிபியின் உடலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு எஸ்பிபி குடும்பத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல் நேற்று மாலை 7.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்திலிருந்து தாமரைப்பாக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும், எஸ்பிபி உடலை எடுத்துச் செல்லும் வாகனத்தைச் சுற்றி இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன. சாலையோரங்களில் நின்ற பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் எஸ்பிபி உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், எஸ்பிபியின் இறுதி நல்லடக்கம் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே எஸ்பிபியின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. எனவே, தமிழகக் காவல்துறையின் ஆயுதப் படையினர் அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்குத் தொடர்ந்து தற்போது எஸ்பிபியை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுபோன்று கர்நாடக அரசும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
-கவிபிரியா
கருத்துகள் இல்லை