சீனாவில் கிங்டாவோ நகரில் 9 பேருக்கு கொரோனா தொற்று – 9 மில்லியன் மக்களுக்கும் பரிசோதனை ஆரம்பம்

 சீனாவில் கிங்டாவோ நகரில் 9 பேர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ள நிலையில், அங்குள்ள 9 மில்லியன் மக்களுக்கும் பரிசோதனை நடத்த

சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

சீனாவில் இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதனால், துரித நடவடிக்கைகளுக்கு மாகாண நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

கொரோனா பரவலை முற்றாக ஒழித்ததாக கூறும் சீனா, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

இதுவரை அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொழில் முடக்கம் என அனைத்தும் நீக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அலுவலகங்களுக்கு வருபவர்களை கொரோனா அறிகுறிகள் தொடர்பில் இன்னும் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எட்டு நோயாளிகள் உட்பட ஒன்பது பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய தொற்றுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

இதனையடுத்து கிங்டாவோ நகரில் வசிக்கும் சுமார் ஒன்பது மில்லியன் பேருக்கும், ஐந்து நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா பெருந்தொற்றுக்கு 85,578 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,634 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

அதன்பின், அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது. ஆகஸ்ட் மாதம், ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில் நான்கு பேரிடம் பாதிப்பு உறுதியானது.

அதனை தொடர்ந்து, பிற நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டது.

இதனால், கடந்த இரு மாதங்களாக நாட்டில் தொற்று பரவல் இல்லை என, அறிவிக்கப்பட்டதுடன், வணிக நிறுவனங்களுக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்பட்டன.

இருப்பினும் அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை இதுவரை சீனா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.