யாழ் மாவட்டத்தில் 3,915 பேர் தனிமைப்படுத்தல்; பல்வேறு அறிவுறுத்தல்களை விடுத்தார் அரச அதிபர்!

 “எங்களைப் பொறுத்தவரைக்கும் புங்குடுதீவில் ஒருருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,212 குடும்பங்களைச் சேர்ந்த 3,915 பேர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

“யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. கம்பஹா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையில் இருவர் புங்குடுதீவில் இனங்காணப்பட்டிருந்தார்கள். அதில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அதனடிப்படையில் அவருடைய நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

அதேவேளையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 57 பேர் போக்குவரத்து மற்றும் ஏனைய இடங்களில் அந்த பெண்ணுடன் தொடர்புபட்டார் என்ன அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இதைவிட நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்தார் என்ற அடிப்படையில் சுமார் 88 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதைவிட மருதங்கேணி பகுதியில் குடாரப்பில் 73 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 9 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பட்டுள்ளார்கள். இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 22 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதனுடன் இணைந்த வகையில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். அதற்குரிய அறிவுறுத்தல்கள் உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு அலுவலகங்கள் இயங்கலாம். அதேநேரத்தில் வர்த்தக நிலையங்கள் இயங்கலாம். ஆனால் அனைவருக்கும் சுகாதார வழிகாட்டி நடைமுறைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சுகாதார நடைமுறைகளை பேணி செயற்படுமாறு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு துறையினரும் அதாவது தனியார் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், பேருந்து உரிமையாளர்கள், அரச பேருந்து சேவையினை சேர்ந்தவர்கள், அதேபோல் சினிமா திரையரங்கினை சார்ந்தவர்கள், திருமண மண்டபம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் போன்றவை குறிப்பாக சந்தைகள் போன்றவற்றில் அந்த வழிகாட்டிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம். அந்த வழிகாட்டிகளை முறையாக அமுல்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். தடையில்லை ஆனால் முறையாக சமூக இடைவெளி பேணி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, கை கழுவி, தொற்று நீக்கி நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

இந்த இடங்களில் ஒவ்வொருவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அந்த விடயம் தொடர்பில் கண்காணிக்குமாறு பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளோம். எங்களுடைய மக்கள் தற்பொழுது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் தளர்வான போக்கினை கடைப்பிடிக்கின்றார்கள். இனிவரும் காலங்களில் குறித்த சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பேருந்தில் பயணிக்கும் போது ஆசன மட்டத்திற்கு அமைவாக பயணிகளை கொண்டு செல்வதற்கு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம் பேருந்துகளையும் முறையாக தொற்று நீக்கி சேவையில் ஈடுபடுத்துமாறும் கோரியுள்ளோம். ஆகவே பொதுமக்கள் இந்த நிலமையை அனுசரித்து நடந்தால் எங்களுடைய தொற்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தொற்று ஏற்படுவதை தடுத்து நிறுத்தலாம்.

பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் நடமாடுவதை கட்டுபடுத்துமாறு பொது மக்களை கேட்டிருக்கின்றோம். அதேபோல் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து வேறு பகுதிக்கு செல்வதற்கு எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனையும் பொது மக்கள் கவனத்தில் எடுப்பது மிகவும் நல்ல விடயமாகும்.

தற்போதைா தளர்வான காலத்தில் மக்கள் முண்டியடித்து பொருட்களை பெறுவதிலும் எரிபொருள் நிலையங்களில் நேரத்தை வீணாக்குவது அவதானிக்கூடியதாக இருக்கின்றது. உணவு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அந்த நிலைமைகளை கவனிக்கும்படி நாங்கள் பிரதேச செயலாளர்களும் அதனோடு தொடர்புபட்ட தொழில் நிறுவனங்களையும் கேட்டிருக்கின்றோம். ஆகவே எந்தவிதமான நிலைமையை சமாளிப்பது தொடர்பிலும் நாம் தயார் நிலையில் தான் இருக்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கான பிசிஆர் பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டால் எதிர்வரும் நாட்களில் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிவரும்.சில பிரதேசங்களை முடக்க வேண்டிய தேவையும் ஏற்படும்” – என்றார்.


Blogger இயக்குவது.