இனப்படுகொலையாளி ராஜபக்சேக்கு மோடி கொடுக்கும் நிதியினை நிறுத்த வேண்டும் -வ.கௌதமன்


இந்திய ஒன்றிய பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள் அண்மையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் நடத்திய காணொளி உரையாடலின் அடிப்படையில் சிங்கள அரசுக்கு "புத்த சமய" வளர்ச்சிக்காக 15 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக பகிரப்பட்டிருப்பது தாய்த்தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தமிழர்கள் உட்பட உலகம் முழுக்க வாழ்கின்ற 12 கோடி தமிழர்களையும் புண்படுத்துகிற ஒரு செய்தி மட்டுமல்ல கடும் கண்டனத்திற்குரிய ஒரு செயலுமாகும்.

தமிழ்நாட்டினை துவைத்தெடுத்த ஒக்கிப்புயல், வர்தாப் புயல், தானே புயலுக்கு நிதி தராத தாங்கள் "கொரோனா" என்கிற எமனை விரட்ட  தமிழக அரசு கூக்குரலிட்டு கோரிக்கை வைத்த நிலையிலும் நிதி தராத தாங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகளை பதைக்க பதைக்க  இனப்படுகொலை செய்த ராஜபக்சே அரசுக்கு நிதி தருவது எத்தகை அறம்?


இலங்கையில் புத்த சமய வெறி பிடித்த புத்த பிக்குகள்தான் தமிழின அழிப்பின் மூலவர்களாக இன்று வரை இருக்கிறார்கள். கடந்த காலங்களில் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 3 லட்சம் தமிழர்களை சிங்களப் படைகள் வேட்டையாடியதற்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர் வீடுகள் சிங்கள அதிகார வர்க்கத்தின் விமான குண்டு வீச்சால் உடைத்து சிதறடிக்கப்பட்டதற்கும், 400 க்கும் மேற்பட்ட முருகன், சிவன், அம்மன் மற்றும் பிள்ளையார் உள்ளிட்ட இந்து கோயில்கள் விமானப்படை  குண்டு வீச்சுக்கு இலக்கானததற்கும், சிங்களப்படை வெறியர்களாலும், கொலை வெறிபிடித்த இராணுவத்தினராலும் 8 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொடூரமாய் கொன்று சாய்த்ததிற்கும் முள்ளிவாய்க்கால் போர் முடிவில் 90,000 தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதற்கும் முழு முதற்காரணம் சிங்கள அதிகாரத்தை தொடர்ந்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மல்வத்த, அஸ்கிரியகளனி ஆகிய தலைமை புத்த பீடங்களேயாகும். இலங்கையில் "புத்த சமய அபிவிருத்தி" என்பது தமிழின அழிப்பே அன்றி வேறில்லை. புத்த சமய அபிவிருத்திக்கு நிதி வழங்குவதை மரியாதைகுரிய நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

யுத்தத்திற்கு முன்பும் பின்பும் வரலாற்றில் என்றைக்குமில்லாத வகையில் சிதைந்து பின்னாபின்னமாகி கிடக்கும் தமிழீழ தமிழர்களுக்கு இதுவரை யாராலும் எந்த உதவியும்  வழங்கப்படவில்லை.

முன்னாள் இந்திய ஒன்றிய பிரதமர் திரு.இராஜிவ்காந்தி அவர்கள் தமிழீழ மக்களின் நன்மைக்கென உருவாக்கப்பட்ட 13வது அரசியல் திருத்தச் சட்டம் குறித்துச் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதற்கு முன்பே தமிழீழ மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத ஒன்றே 13 வது அரசியல் திருத்தச் சட்டம் என்பதை மோடி அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மண்ணில் தமிழ் இனத்தின் தேசிய அடையாளத்தை அழித்தொழிக்கும் நோக்கோடு இன்று முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் "சிங்கள குடியேற்றத்தை"  தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் மரியாதைக்குரிய  மோடி அவர்கள் ஈடுபட்டிருந்தால் வரவேற்கக் கூடிய நடவடிக்கையாக இருந்திருக்கும்.

இலங்கையில் ராணுவ தளம் அமைத்து விட்ட சீனா  முற்று முழுதாக அந்த மண்ணை விழுங்க திட்டமிட்டு செயலாற்றி வரும் இக்காலகட்டத்தில் இந்திய ஒன்றிய அரசு "தமிழீழ தாயகத்தைக்" காப்பதே இந்தியாவை காப்பதற்கு ஒப்பானதாகும்.

என்றைக்கு இருந்தாலும் தமிழீழமும், தமிழீழத்தை ஆள்கின்ற தமிழ் தலைமைகளும்தான் இந்துமாக்கடலுக்கு அரணாக இருந்து இந்தியாவுக்கு பாதுகாப்பாக நிற்பார்கள். இதைத்தான் இதற்கு முன்பு தமிழீழத்தை அரசாண்ட மேதகு பிரபாகரன் அவர்களும் அவரின் மக்கள் ராணுவமும் செய்தது.
என்றாவது ஒரு நாள் ஒன்றே முக்கால் கோடி கொண்ட சிங்களர்கள் சீனாவோடு சேர்ந்து  இந்திய ஒன்றியத்தை வேரறுப்பார்கள் என்பதே எதார்த்தத்தின் பேருண்மை.

பேரன்பு கொண்டு உலகம் முழுக்க வாழ்கின்ற 12 கோடி தமிழர்களின் உறவு முக்கியமா? துரோக எண்ணத்தை மட்டுமே கொண்ட ஒன்னே முக்கால் கோடி கொண்ட சிங்களர்களின் உறவு முக்கியமா? என்பதை ஒரு நொடியாவது எண்ணிப்பார்த்து மரியாதைக்குரிய மோடி அவர்கள்  செயல்பட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
"சோழன் குடில்"
01.10.20 20

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.