கொழும்பில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா!


 மேல் மாகாணத்தில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயத்தின், கொவிட்-19 பரவல் தொடர்பான நிலவர அறிக்கையில் இந்தத் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.

5 ஆயிரத்து 779 பேர் சந்தேகத்திற்குரிய நபர்களாக தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

17 ஆயிரத்து 694 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானோருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 598 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 3 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 297 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள 23 மரணங்களில், 12 மரணங்கள் மேல் மாகாணத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில், வட கொழும்பு, மத்திய கொழும்பு முதலான பகுதிகள் கொவிட்-19 தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி கார்த்திகேசு சிறிபிரதாபன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் கொவிட்-19 பரவல் நிலை குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் நாளாந்தம், 300 முதல் 400 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி கார்த்திகேசு சிறிபிரதாபன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.