கொரோனா மரணங்கள் எச்சரிக்கும் கொழும்பு மருத்துவ அதிகாரிகள்

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவான மரணங்களில் 16 மரணங்களில் பெரும்பாலானவை கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன என  சிங்கள  மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, குறித்த மரணங்களில் ஏதேனும் விசேட காரணி தாக்கம் செலுத்துகின்றதா என்பது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் கூறியுள்ளதாவது, “நாம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பாகவே அதிகளவு பேசிக்கொண்டிருந்தோம்.

ஆனால் இனிவரும்  நாட்களில் மரணங்களைப் பற்றி பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதாவது எதிர்வரும் டிசம்பர் மாத ஆரம்பத்தில் கொரோனா மரணங்கள் பற்றியே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியேற்படும்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் உரிய  தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒன்பது மாதங்களில் 13 மரணங்கள் என்ற நிலைமை தற்போது இரு வாரங்களில் 16 மரணங்கள் என்ற நிலைமையாக மாறியுள்ளது.

இது மிகவும் அபாயமான நிலைமையாகும்.அதிலும் அண்மையில் பதிவாகிய 16 மரணங்களில் பெருமளவானவை கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்டவையாகும்.

எனவே, கொழும்பு மாநகசபையை அண்மித்த பகுதிகளில் பரவும் வைரஸினால் பதிவாகும் மரணங்களுக்கு ஏதேனும் விசேட காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும்.

வைரஸ் மாற்றமடைந்துள்ளதா அல்லது அதற்கு சுற்றுச்சூழல் இசைவாக்கமடைந்துள்ளதா அல்லது மக்களின் நடமாட்டமா இதற்கு காரணம் என்று துரிதமாக கண்டறியப்பட வேண்டும்.

ஆகவே,  கொவிட் மரணங்கள் தொடர்பான மீளாய்வு செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகின்றோம்.

அண்மையில் பதிவாகிய ஒவ்வொரு மரணங்கள் தொடர்பிலும் வெவ்வேறாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.