அமெரிக்க மக்களுக்கு உரை நிகழ்த்தப் போவதாக ஜோ பைடன் அறிவிப்பு

 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னமும் முழுவதுமாக வெளியாகாத நிலையில், சமூக வலைத்தளங்களில்  ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹரிஸூக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இத்துடன் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு தேசத்திற்கு உரையாற்ற உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பென்சில்வேனியா  நெவாடாவில் மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு தொடர்ந்து சாதகமாக வாக்குகள் பதிவாகியதையடுத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


அமெரிக்க தேர்தலில் பொதுவாக நவம்பர் 3 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் நிலையில் நவம்பர் 4 ஆம் திகதியே முடிவுகள் தெரிந்துவிடும் ஆனாலும் தற்போது தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ததைதொடர்ந்து  முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, ஜோர்ஜியா  நெவேடா ,விஸ்கோஷ்ஸின், மிச்சிகன் போன்றவற்றில் வாக்குகளை எண்ணும் பணிகள் தாமதமாகியதுடன் மீள எண்ணும் பணிகள் நடந்து வருகின்றன.

எனினும் தற்போது வரை  ஜோ பைடன் 253  'எலக்ட்டோரல் காலேஜ்' உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்றுள்ள நிலையில் 270 என்ற இலக்கை அடைய அவருக்கு இன்னும் 7 'எலக்ட்டோரல் காலேஜ்' உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இது இரு வழிகளில் சாத்தியமாகலாம், அவர் பென்சில்வேனியாவை வென்றால், அவர் 20 புள்ளிகளைப் பெறுவார், எனவே அரிசோனா அல்லது நெவாடா குறித்து யோசிக்க தேவையில்லை.

ஆனால் அவர் அரிசோனாவை வென்றால் - அதில் 11 “எலக்ட்டோரல் காலேஜ்'  உள்ளது.  நெவாடாவிலும் வெற்றி பெற்றால் - 6 எலக்ட்டோரல் காலேஜ்' உள்ளது - அவருக்கு பென்சில்வேனியா குறித்து யோசிக்க தேவையில்லை.

வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஜோ பைடன் பென்சில்வேனியாவில் 13371 வாக்கு வித்தியாசத்திலும், நெவாடாவில் 20,137 வாக்கு வித்தியாசத்திலும், அரிசோனாவில் 43,779 வாக்கு வித்தியாசத்திலும் முன்னனியில் உள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடன்  அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக  உப ஜனாதிபதி பொறுப்பை ஏற்கும் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை கமலா ஹரிஸ்  புரியவுள்ளார். 

அதுவும் ஒரு இந்திய வம்சாவளி பெண் என்பது மற்றுமொரு சிறப்பாக அமையவுள்ளது. இத்துடன்  அவர் 2017ம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்பதவிக்கு தெரிவான  முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமையைத்தனதாக்கியிருந்தார். 


 கமலா ஹரிஸ்

இவர் கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் சட்டமா அதிபராக 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை கடமையாற்றியுள்ளார். 

 கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக உள்ளவரும் சிறந்த சட்டப்புலமை கொண்டவருமான  கமலா ஹரிஸை, தனது உப ஜனாதிபதி வேட்பாளராக இவ்வாண்டு ஒகஸ்ட் மாதம் 11ம் திகதி பெயரிட்டிருந்தார் ஜோ பைடன். 

அமெரிக்க ஜனநாயக்கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான போட்டியில் 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது பெயரையும் பதிவுசெய்து ஆரம்பத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கமலா ஹரிஸ் பின்னர் குறைவான ஆதரவுகாரணமாகவும் விமர்ச்சனங்கள் காரணமாகவும் அதிலிருந்து விலகிருந்தார். 

1964ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி பிறந்த கமலா ஹரிஸின் முழுப்பெயர்  கமலா தேவி ஹரிஸ் என்பதாகும். 

தந்தை ஜமெய்க்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதுடன் அவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்த தமிழர்.  

 தாயாருடைய பெயர் சியாமளா கோபாலன் . மார்பக புற்றுநோய் பற்றிய விஞ்ஞானியான அவர் 1960ம்ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

தந்தை டொனால்ட் ஹரிஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக விளங்கியவர். 

55 வயதுடைய கமலா ஹரிஸின் மாயா என்ற தங்கையும் கமலாவிற்கு உள்ளார். 


 

 ஜோசஃப் ராபினெட் "ஜோ" பைடன், ஜூனியர் (Joseph Robinette "Joe" Biden, Jr.)

      வயது 77 வயதான இவர் ஸ்க்ராண்டன், பென்சில்வேனியாவில் பிறந்துள்ளார். 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47ஆவது துணை ஜனாதிபதியாக பணியாற்றிய ஓர் அமெரிக்க அரசியல்வாதி ஆவார். 

ஜனநாயகக்கட்சியின் சார்பில் 2020ஆம் ஆண்டு ஜனாதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏப்ரல் 25, 2019 அன்று பைடன் அறிவித்தார்.

ஜூன் 2020 இல், கட்சியின் வேட்புமனுவைப் பெறுவதற்குத் தேவையான 1,991 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார்.

இவர் 1973 முதல் 2009 வரை அமெரிக்க மேலவையில் டெலவெயர் தொகுதியை சார்புத்துவப்படுத்தினார்.

1988 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் பைடன் தோல்வியுற்றார்.

1987 முதல் 1995 வரை மேலவையின் நீதித்துறைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார், போதைப்பொருள் கொள்கை, குற்றத் தடுப்பு மற்றும் குடிமக்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாண்டார். 

வன்முறைக் குற்றக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பிடென் தலைமை தாங்கினார். 

ஐக்கிய அமெரிக்க மேலவையில் பிடென் ஆறு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.