அரசாங்கத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது - பசில் உறுதி
பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (09) நடைபெற்ற பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் உர இறக்குமதி மற்றும் விநியோகத்தை செயல்திறன் மிக்கதாக்குவது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நீர் மற்றும் உரத்தை விநியோகிப்பதன் ஊடாக குறுகிய காலத்தினுள் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இதன்போது உரம் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் தனியார் நிறுவனங்கள் பசில் ராஜபக்ஷவிடம் விரிவாக கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஆண்டின் சிறு போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு விரைவாக ஒப்புதல் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட தொகையை டிசம்பர் மாதமளவில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டினர்.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ,
விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வேண்டிய சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யக்கூடிய சூழலொன்று உருவாக்கப்படுமென்றும் உரத்தின் தரத்தை ஒழுங்குறுத்துவதற்கும், கழிவற்ற உயர் தரத்திலான உரத்தை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆண்டிற்கு தேவையான 7,08,910 மெற்றிக் தொன் மொத்த உரத்தில் சிறு போகத்திற்காக 2,85,504 மெற்றிக் தொன் ஒதுக்கப்படுவதுடன், பெரும் போகத்திற்காக 4,23,406 மெற்றிக் தொன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை