வாகன ரயரால் பிரதேச சபையில் அமளி துமளி!


 வடமராட்சி – பருத்தித்துறை பிரதேச சபையின் அமர்வு இன்று (18) காலை தவிசாளர் ச.அரியகுமார் தலைமையில் சபை மண்டபத்தில் இடம் பெற்றவேளை சபையில் அமளிதுமளி இடம் பெற்றது.

பிரதேச சபையின் வாகனத்திற்கு ரயர் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு 15 நாட்கள் கடந்தும் வாகனத்திற்கு மாற்றப்படாமலிருந்ததால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது.

பெறுகை குழுவால் அனுமதிக்கப்பட்டு ரயர்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் சபையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் அதன் விலை அதிகமென கூறி சபையின் சொத்துப்பதிவில் பதியாமல் இருந்ததன் காரணமாகவே உரிய ரயர் மாற்றம் செய்யவில்லை என்று சபை செயலாளர் பதில் கூறினார்.

அதனை பொறுப்பற்ற பதில் எனவும், செயலாளர் இது விடயமாக பதிலளிக்க முடியாது என்றும் பெரமுன கட்சி உறுப்பினர் தெரிவித்ததை அடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் பெரமுன உறுப்பினர் தண்ணீர் கிளாசை தரையில் வீசி உடைத்து எறிந்து தனது எதிர்ப்பை வெளியிட்டு தவிசாளர் மற்றும் செயலாளருடன் கடுமையான வார்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து சபையின் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள், தமிழரசு கட்சி உறுப்பினர்கள், முன்னணி உறுப்பினர்கள் என பலரும் தவிசாளர் மற்றும் செயலாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை சபை அமளிதுமளியாக காணப்பட்டது.

Blogger இயக்குவது.