மக்களுக்கு சோகம் மிகுந்த செய்தி - ஜனாதிபதி!


 இலங்கை ராமாஞ்ஞ மகா நிக்காயவின் அக்ரமஹா பண்டித சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் மறைவு பற்றிய செய்தியால் நான் மிகவும் கவலையடைகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தேரரின் மறைவு எமது நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றுள்ளார்.

தொடரும் அனுதாபச் செய்தியில்,

“சங்கைக்குரிய நாபான பேமசிறி மகா நாயக்க தேரர் புத்த பெருமானின் போதனைகளுக்கு வரைவிளக்கணமாக திகழ்ந்த மகா சங்க பிதாக்களில் ஒருவர்.

அவர் ஒரு தேரராக தனது முழு வாழ்க்கையையும் கருணையுடன் மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். ஒரு நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் காண கிராமங்களுக்கு சமயப் பயணங்களை மேற்கொண்டிருந்த எங்கள் சங்கைக்குரிய தேரர், சாமானிய மக்களுக்கு ஆன்மீக சிகிச்சை அளித்ததுடன், அவர்களின் சமூகப் பிரச்சினைகளையும் கண்டறிந்து தீர்ப்பதில் உறுதியாக இருந்தார்.

பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக எமது நாயக்க தேரர் செய்த மகத்தான அர்ப்பணிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் மதிப்பையும் பாராட்டையும் பெற்றது.

உலகின் கீர்த்திமிகு தேரர்களுக்கு பர்மா அரசால் வழங்கப்படும் “அக்கமஹா பண்டித“ கௌரவ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த அனைத்து கௌரவங்களையும் அன்புணர்வுடன் ஏற்றுக்கொண்ட நாயக்க தேரர் அவர்கள் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார்.

சமயம் மற்றும் சாசனம் சம்பந்தமான அரச கொள்கையை வகுப்பதில் நாபான பேமசிறி நாயக்க தேரரரிடம் இருந்து கிடைத்த அறிவுரைகள் பேருதவியாக இருந்தன என்பதை இந்த நேரத்தில் நான் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

தேசத்திற்காகவும் சமயத்திற்காகவும் பெரும் பணி செய்த இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் மகா நாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரர் முடிவான நிர்வாண அருளைப் பெற பிரார்த்திக்கிறேன் என்றும் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.