எது பயங்கரவாதம்? தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர் தினம். 


நீதிமன்றங்கள் ஊடாக இலங்கை அரசு பெற்றுக் கொண்ட தடை உத்தரவுகள் காரணமாக தமிழ் மக்கள் பொது நினைவேந்தல் நிகழ்வு எதனையும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே நினைவேந்தலை முன்னெடுக்கின்றனர்.

இத்தகைய தடை உத்தரவுகளை நீதிமன்றங்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசு கூறிய பிரதான காரணம், நினைவேந்தப்படும் விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதிகள்’, 'தடை செய்யப்பட்ட இயக்கத்தை' சேர்ந்தவர்கள் என்பதாகும்.

இதனால்தான், ‘யார் பயங்கரவாதி?’ என்ற கேள்வி எழுகின்றது. இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சிங்கள மக்களுக்கு வழங்கியிருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன்.

பிரிட்டிஷார் இலங்கையை ஆக்கிரமித்து இருந்த போது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர், கெப்பிட்டிபொல திஸாவ. பிரிட்டிஷாரால் ஒரு ‘கிரிமினல்’ என்றும், ‘தீவிரவாதி’ என்றும் அறிவிக்கப்பட்டவர். தேடப்படும் குற்றவாளி என்றும் பிரகடனப்படுத்தப்பட்டவர். ஆனால் அவர் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிலிருந்து தனது மக்களை விடுவிக்கப் போராடியவர். இப்போது அவர் சுதந்திரப் போராட்ட வீரராகவும்,ஒரு கதாநாயகராகவும் போற்றப்படுகின்றார். பிரிட்டிஷ் காலத்தின் ‘கிரிமினல்’ இன்று சுதந்திரப் போராட்ட வீரர்.

ஆகவே தம்முடைய உரிமைளுக்காக, சுதந்திரத்துக்காக கூட்டாகவோ, தனித்தோ போராடும் ஒருவரை நீங்கள் வெகு இலகுவாக ‘பயங்கரவாதி’ பட்டம் சூட்டிக் கொள்ள முடியாது.

எங்கள் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தைத் விரட்டுவதற்காகப் போராடினார்கள். அவர்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ‘பயங்கரவாதிகள்’ என்று அழைக்க முடியாது. அவர்கள் எவரும் ‘பயங்கரவாதிகள்’ அல்லர் என்று வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் உரைத்திருக்கின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

இலங்கை இராணுவத்தில் 99 வீதம் சிங்களவர்களே. அதனால் அது ‘சிங்கள இராணுவம்’தான், ‘இலங்கை இராணுவம்’ அல்ல என்று சுட்டிக்கட்டும் அவர், வெள்ளையரின் கீழ் இலங்கை இராணுவம் இருந்தபோது இராணுவத்தில் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலாயர்கள் என பல்லினத்தவரும் தாராளமாக இருந்தனர் என்பதையும் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த சிங்கள இராணுவமும் அதன் ஆதரவாளர்களும்தான் எங்கள் தரப்பில் இறந்த இளைஞர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘பிரிவினவாதிகள்’ என்றும் பட்டம் சுட்டுகின்றனர் என்பதையும் விளக்குகின்றார் அவர்.

ஒருவரின் கொலை நடவடிக்கையை சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் கையாளும் அரசு, மற்றொரு கொலைச் சம்பவத்தை ‘பயங்கரவாதமாக’ அடையாளப்படுத்தி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வித்தியாசமாகக் கையாள்கின்றது. இங்கு அரசு தன் விருப்பப்படி, ஆள்களுக்கு ‘பயங்கரவாதம்’ பட்டம் சூட்டுகின்றது. இது பெரும் அபத்தம் என்கிறார் நீதியரசர் விக்னேஸ்வரன் எம்.பி.

அரசு, தமிழ் இளைஞ்களை -,தமது வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடியோரை - ‘பயங்கரவாதிகள்’ என்றும், அவர்களின் நடவடிக்கையை ‘பயங்கரவாதம்’ என்றும் அடையாளப்படுத்தினாலும் எது உண்மையில் பயங்கரவாதம் என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்திருக்கின்றார் அவர்.

‘‘உண்மையில் இலங்கையில் காலத்திற்குக் காலம் ஆட்சியில் இருந்த அரசுகளினல்தான் ‘பயங்கரவாதம்’ முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமது குண்டர்கள் மூலம் தமிழர்கள் மீது பயங்கரவாதத்தை அந்த அரசுகள் ஏவி விட்டன. அது 1958, 1961, 1977, 1983 எனத் தொடர்ந்தது. அப்பாவிகள் குத்திக் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படனர். சிறுவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பல அப்பாவிகள் கார்களுக்குள் போட்டுத் தீ வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அப்போது இருந்த அரசுகள் தமது பொலிஸாரையும், இராணுவத்தினரையும் மறுபுறம் திரும்பி உதாசீனமாகப் பார்த்திருக்க வைத்துக் கொண்டு, இவ்வளவையும்அரங்கேற்றின. அப்போது அரச பயங்கரவாதம்தான் முழு அளவில் கட்டவிழ்ந்தது’’ - என்ற உண்மையை போட்டுடைக்கும் அவர், தொடர்ந்து ஒரு நியாயமான வினாவையும் சிங்கள தேசத்தயும் உலகையும் நோக்கி முன்வைக்கின்றார்.

சுதந்திர இலங்கையில் இவ்வளவு கேவலமாக - மோசமாக - அரச பயங்கரவாதம் ஏவி விடப்படுவதற்கு தமிழர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நன்கு கற்றறிந்தவர்களாக, கடின உழைப்பாளர்களாக, மனச்சாட்சிப்படி கடும் பணியாற்றுபவர்களாக அவர்கள் இருந்தமை ஒன்றே அவர்கள் இழைத்த தவறு என மனம் வெதும்புகின்றார் நீதியரசர்.

அது மட்டுமல்ல, இப்படி அப்பாவித் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் - சிங்கள மேலாண்மைக் கொடூரம் - மிக மோசமாக ஏவி விடப்பட்டதனால், வேறு வழியின்றி, தற்பாதுகாப்புக்கும் தமது உரிமைகளை நிலைநாட்டவும் ஆயுதம் ஏந்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் தமிழ் இளைஞர்கள் என்று விளக்குகின்றார்.

அதனால் இங்கு பயங்கரவாதம் என்பது சிங்களத்தின் முட்டாள்தனமான  பிற்போக்குவாதப் பிரசாரமின்றி வேறில்லை. அதை வெளிப்படையாக, துணிச்சலுடன் இந்தச் சமயத்தில் உரைக்கும் நீதியரசர் விக்னேஸ்வரன் அதற்காகப் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவர்.

நன்றி:  காலைக்கதிர்- ஆசிரியர் தலையங்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.