மயிலத்தமடு காணிகளும் பறிபாேகிறது!


 “மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்கு பயந்து ஒழிந்து கொண்டுள்ளது”

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,

“மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மை சமுகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்தார்கள் அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள்.

அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் , அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை ஒரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை.

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால் நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இவ் அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணியாளர்கள் தாக்குப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Blogger இயக்குவது.