சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும்!


 இலங்கையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் மீறிய அடக்குமுறையே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பிருந்தும் அதனை தவறவிட்டமை தொடர்பில் பொறுப்பேற்குமளவுக்கு ஆளுமையுடைய எவரும் ஆளும் தரப்பில் இல்லை என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,


ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்காத காரணத்தினாலேயே நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி  ஏற்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகின்ற போதிலும் இலங்கையை பொறுத்தமட்டில் வைரஸ் பரவல் நாட்டுக்குள் பரவாத வகையில் நாட்டை பாதுகாத்து கொள்வதற்கான வாய்ப்பிருந்தது. 


ஆனால் அரசாங்கம் ஆரம்பத்தில் பொது தேர்தலை நடத்தும் நோக்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யும் வரையில் நாட்டை முடக்காதிருந்தமையால் வைரஸின் முதலாவது அலை ஏற்பட்டதுடன் , 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் உரிய தருணத்தில் உரிய தீர்மானத்தை எடுக்க தவறியமையினால் வைரஸ் பரவலின் இரண்டாம் அலையும் ஏற்பட்டுள்ளது.


நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற கூட நாட்டின் ஜனாதிபதியால் முடியாமல் இருக்கின்றது. அதன் காரணமாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா  தேசத்திற்கு சிறப்புரையாற்ற வேண்டியேற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் ஒரு பிழை ஏற்பட்டால் அதன் பொறுப்பை ஏற்குமளவுக்கு ஆளுமையுடைய எவரும்  இல்லை. மாறாக இராணுவ சீருடையை காண்பித்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நபர்களே இருக்கின்றனர். 


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளமை தொடர்பான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்மாதிரியாக பதவி விலக வேண்டும்.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் நாட்டின் சிறந்த ஆளுமையுடைய தலைவராக மக்கள் மத்தியில் நம்பிக்கைப் பெற்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மக்கள் எதிர்பார்த்ததைப் போன்ற ஆளுமையுடைய தலைவர் அல்ல என்பதை மக்கள் புரிந்துக் கொள்வதற்கு வாய்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.