திருகோணமலையில் மாடு மோதி விபத்தாகி பலியான இளைஞன்!


 திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மூன்றாம் கட்டை-வளர்மதி வீதியில் வசித்து வரும் இலங்கை போக்குவரத்துச் சபை திருகோணமலை கிளையில் காப்பாளராக கடமையாற்றி வரும் 36 வயதுடைய தங்கராஜா அருணன் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் முச்சக்கரவண்டியில் தனது தந்தையை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போதே முருகாபுரி பகுதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த காப்பாளரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலையில் அதிகளவான மாடுகள் வீதியில் பராமரிப்பு இன்றி இருப்பதாகவும், இதனால் பல விபத்துகள் இடம்பெறுள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி பல முறை நகர சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Blogger இயக்குவது.