30 குழந்தைகளை விற்றவருக்கு பிணை!


 பணத்திற்காக சுமார் 30 குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி சந்தேகநபர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குழந்தைகளை சட்ட விரோதமான முறையில் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்துவந்த வெளிநாடுகளில் குழந்தை பண்ணை எனும் சொற்பதத்தால் அறியப்படும் நிலையங்களை ஒத்த இரு நிலையங்களை பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் நேற்று சுற்றிவளைத்தது.

மொரட்டுவை – ஹல்தமுல்ல, சி.பி.டி சில்வா மாவத்தை மற்றும் தஹம் மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இயங்கிய இரு நிலையங்களே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டன.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான அல்லது, வேறு நிலைமைகள் காரணமாக குழந்தை கருவில் இருக்கும்போதே தாய்மாருடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்து, அக்குழந்தைகள் பிறந்ததும் மூன்றாம் தரப்பினருக்கு இந்த நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பிலான பிரதான சந்தேக நபரை மாத்தளை உக்குவலையில் வைத்து கைது செய்ததாக கூறினார். சுமார் 30 குழந்தைகள் வரை இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விஷேட விசாரணைகள் இடம்பெறு வருதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கர்ப்பிணி தாய்மார்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 தாய்மார்களின் குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு பணத்திற்காக ஏற்கனவே விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் 3 குழந்தைகள், அவர்களது தாய்மாருடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 12 கர்ப்பிணிகள், குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு பெற்றுக்கொடுக்கும் சட்டவிரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தேகநபரால் பராமரிக்கப்பட்டு வந்தமையும் தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேக நபர், இணையத்தில் வெளியிட்ட குழந்தை ஒன்றினை கையில் ஏந்திய நிலையிலான வீடியோ ஒன்றினை அடிப்படையாக கொண்டு இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.