கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம்!
வேளாண் சட்டங்களை திரும்ப பெற தொடர்ந்து வலியுறுத்தி டில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை இந்திய மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்பப் பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26 ஆம் திகதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டில்லி முடங்கி வருகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்ந்தது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியில் குழுமி உள்ளனர்.
டில்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் டில்லியில் கடும் குளிர் நிலவியது. எனினும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் திறந்த வெளியில் படுத்து உறங்கியுள்ளனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்த நிலையில் 09 ஆம் திகதி மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்து பேசவுள்ளனர்.
விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது.
குறிப்பாக விவசாயிகளை ஆதரித்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் விருதுகளை திருப்பி வழங்க முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் பிரபல குத்துச்சண்டை வீரரும், ஒலிம்பிக் பதக்கம் பெற்றவருமான விஜேந்தர் சிங்கும், தனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்கப்போவதாக கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) நடத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை