இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது!


 தமிழ் இளைஞர்களிற்கு இராணுவப்பயிற்சி வழங்குவதற்கு ஆதரவாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை கண்டித்துள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.ககதாஸ்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்-

இலங்கை அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இராணுவப் பயிற்சி இந்த நாட்டின் தமிழ் சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படாமல் தொடர்ந்தும் சந்தேகங்கள், முரண்பாடுகள், பரஸ்பரம் இனங்களிடையே உரிமைகளை பகிர்ந்து கொள்ளாமை, போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைக்கான நீதி நியாயங்கள் கிடைக்கப் பெறாத வரை இராணுவ பயிற்சியை தமிழர் தலைமைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் இன ரீதியாக பாரிய ஆபத்துக்களை உருவாக்கும். இலங்கை அரசாங்கம் கட்டாயப் படுத்தலில் வடக்கு கிழக்கில் கொடுப்பது வேறு. அதனை தமிழர் தரப்பு தலைமைகளின் ஆதரவுடன் கொடுப்பது இனத்தின் நீதிக்கான பயணத்தில் பின்னடைவை உருவாக்கும்.

இலங்கை இராணுவம் போர் விதி முறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும் தமிழர் தரப்பு அந்த குற்றங்களை புரிந்த இராணுவ தளபதியே பொறுப்பாக இருக்கும் போது இந்த இராணுவத்தை வழி நடாத்திய ஆட்சியாளர்களே ஆட்சிக் கதிரையில் இருக்கும் போது அவர்களின் பயிற்சியை நாமே ஏற்றுக் கொள்வது குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் இங்கு தான் தமிழர்களுக்கு ஆபத்து உருவாகிறது.

இராணுவப் பயிற்சி தலைமைத்துவ பண்புகளை நன் நடைத்தைகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இடம் இல்லை. ஆனால் அப் பயிற்சி கொடுக்கும் தரப்பிடம் அவ்வாறான எண்ணம் உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும் அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் உள்ளாதா? என்றால் தமிழர் தரப்பின் சாதாரண பிரஐை கூட சொல்லுவான் பதில் இல்லை என்று.

இராணுவப் பயிற்சியில் அடிப்படைப் பயிற்சி என்பது பாலர் பாடசாலை போன்றது பாலர் பாடசாலையில் கற்பிக்கப்படும மனப்பதிவை எப்படி ஒரு மாணவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றானோ அதே போன்றது தான் இராணுவப் பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியும் அமையும்.

இராணுவ பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவனை அனுப்பி பயிற்சி பெற வைத்தால் அங்கு பயிற்றப்படும் கோசம், தேசியம் சார்ந்த விடையங்கள்,தேசியக் கொடியின் மகிமை , நாடு பற்றிய கொள்கைகள் என பல விடையங்கள் பயிற்று விக்கப்படும். தற்போது தமிழர்களின் பூர்விக அடையாளங்களை மாற்றியமைக்கும் இலங்கை அரசு தமிழ்த் தேசியம் தொடர்பாக பயிற்சி கல்லூரியில் மூச்சு விடுமா?
தமிழ்த் தேசியம் பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடும் தமிழர் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எழுந்த மானமாக தமிழில் பயிற்சி கொடுக்கலாம் முன்னாள் போராளிகளை பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் இல்லாவிட்டால் தென் இந்தியாவில் இருந்து பயிற்று விற்பாளர்களை வரவழைக்கலாம் என கூறுவது மிகவும் பொறுப்பற்ற கருத்துக்கள் மாத்திரமல்ல இனத்தின் விடுதலைக்கான தூர நோக்குப் பார்வை இல்லாததன் வெளிப்பாடாகவே இக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் விசாரணையில் சந்தேக கண் கொண்டு புலனாய்வார்களின் கிடுக்குப் பிடியில் வைத்திருக்கும் இராணுவ இயந்திரத்திடம் , தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒரு நிகழ்ச்சி நிரலாக செய்யும் அரசாங்கத்திடம், தென்னிந்திய தமிழர்களின் ஆதரவு ஈழத் தமிழர்கள் பக்கம் இருப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தமிழக மீனவர்களை ஈவிரக்கம் அற்ற வகையில் கொன்றேழித்த இலங்கை அரசாங்கத்திடம் நல்லெண்ண வெளிப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா? தமிழர் தலைவர்கள் நிதானமான முடிவுகளை கருத்துக்களை முன் வைப்பதுடன் தமிழர் தேசம் பலம் இழக்கும் நிலைக்கு பாதை அமைக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.