கிழக்கு மாகாணத்திற்கு 14,010 தடுப்பூசிகள் வழங்கப்பட்டது!


 கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் சுகாதார துறைசார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் மொத்தமாக 14,010 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு 258 நிலையங்கள் ஊடாக செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்

இதில் மட்டக்களப்பு மாட்டத்திற்கு 3,400 தடுப்பூசிகளும், அம்பாரைக்கு 3,070 தடுப்பூசிகளும், கல்முனைக்கு 4,870 தடுப்பூசிகளும், திருகோணமலைக்கு 2,670 தடுப்புசிகளும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கப்பட்ட 3400 தடுப்பூசிகள் அனைத்தும் 14 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட 37 வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உழியர்கள் உள்ளடங்கலாக பகிர்ந்தளிக்கப்பட்டு அவற்றினை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசி எற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டாமாக களுவாஞ்சிகுடி, பழுகாமம், மண்டூர், மகிழூர், பெரியகல்லாறு, துறைநீலாவணை ஆகிய வைத்தியசாலை ஊழியர்கள், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள், வெல்லவெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள், அனைவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தங்களது தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர். இதன் போது முதலாவது தடுப்பு ஊசியினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரன் அவர்கள் ஏற்றி ஆரம்பித்து வைத்தார் இதனை தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் குறித்த ஊசியினை ஆர்வத்துடன் ஏற்றிக் கொண்டனர்.

குறித்த இடத்திற்கு தடுப்பு ஊசியேற்றும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வந்த மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வே.குணராஜசேகரம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.

மேற்படி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தளவில் முதற்கட்டமாக சுகாதார துறைசார்ந்த ஊழியர்களுக்கு மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுகாதார துறைசார்ந்த வைத்தியர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மாதுக்கள் மற்றும் சுகாதார துறைசார்ந்த ஏனைய அனைத்து ஊழியர்கள் அனைவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் தடுப்பூசியினை செலுத்தும் நடவடிக்கைகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றேன். இதன்போது அனைத்து ஊழியர்களும் ஆர்வத்துடன் செலுத்திக்கொள்வதனை அவதானிக்க முடிந்தது. அத்துடன் ஏற்றப்பட்ட தடுப்பூசி சம்பந்தமாக இதுவரைக்கும் எதுவித முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கவில்லையெனவும் எதிர்வரும் மாதம் இவர்களுக்கு இன்னுமொரு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வே.குணராஜசேகரம் அவர்கள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.