வல்லினம் 9- கோபிகை!!


வரிசையில் நின்று ஒருவாறாக தன்னுடைய நேரம் வர குளிப்பதற்காகச் சென்றான் கடல். அங்கேயெல்லாம் அதிகம் குளிக்க முடியாது, கிண்ணத்தில் அள்ளி, நான்கு தரம் உடம்பை நனைத்தவன், கோம்பா, லக்ஸ், பேபி என வகைவகையான நான்கு வித சவர்க்காரங்களை ஒன்றாக ஒட்டியிருந்ததை  எடுத்து நாசியில் வைத்து நுகர்ந்தான். 

மூன்று சவர்க்காரங்களும் சேர்ந்து என்ன வாசம் வருகிறது எனப்பார்த்தவன், கோம்பா வாசனையே அதிகமாக இருக்க சிரித்தபடி உடம்பில் தேய்த்துக்கொண்டான். 

அவனைப் பார்க்க யாரும் வருவதில்லை என்பதால், அவனுக்கென்று பிரத்தியேகமாக எந்தச் சவர்க்காரமும் கிடையாது. கூட இருப்பவர்களில் பார்க்க வருபவர்களின் உறவினர் கொண்டுவரும் சவர்க்காரங்களில் நண்பர்கள் இவனுக்கும் கொடுப்பார்கள். தேய்ந்த சவர்க்காரங்களை சேர்த்துவைத்து ஒன்றாக்கிவிடுவான் கடல். 

குளித்துவிட்டு வெளியே வந்தான். காலில் இருந்த செருப்பு நன்றாகத் தேய்ந்துவிட்டிருந்தது. பாதம் படும் இடத்தில் சிறு ஓட்டை கூட வந்துவிட்டது. 

வாழ்க்கை அள்ளிவீசியிருந்த அவலங்கள் அவனைப் போன்றவர்களை பேரலை போல சுருட்டிப் போட்டிருந்தது. 'சீ.....பேசாமல் வீரச்சாவடைந்திருந்தாலும் பரவாயில்லை.....நான் கரும்புலியா போறன் எண்டு எத்தினை தரம் கேட்டன்.....உந்த அண்ணாக்கள் தான் விடயில்லை, இல்லாட்டி இந்த அவலம் எல்லாம் கிடையவே கிடையாது.....காடுகளுக்கை இருக்கிற நேரம் கூட களிப்புக்கு பஞ்சம் கிடையாதே.....அண்ணா...அண்ணா..எண்டு சுத்தி நிப்பாங்களே பெடியள்......' பெருமூச்சொன்றை வெளிவிட்டவன் நீண்ட விறாந்தையில் நடந்து தனது இடத்திற்கு வந்து, பையில் இருந்த இருபது ரூபா பவுடரில் சிறிதை எடுத்து பூசியபடி அமரவும் 'அண்ணா...வந்திட்டியளே....'.என்றபடி பகலவன் வரவும் சரியாக இருந்தது.  

"அண்ணா....உங்கட பெயருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதாம், தங்கச்சி கொண்டுவந்தவள், இந்தாங்கோ"

நீட்டிய பகலவனை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தான் கடல், "என்னடா உளறுறாய்? உன்ர வீட்டுக்கு எனக்கு யார் கடிதம் போடுறது?"

"ஐயோ...அண்ணா, இது என்ர வீட்டுக்கு வரேல்ல, தங்கச்சியின்ர அலுவலகத்துக்கு வந்ததாம், உங்கட கவிதைகளை என்னட்ட தந்து நான் அவளட்டத்தானே குடுத்து போடுறனான், என்ர தங்கச்சி பத்திரிகை அலுவலகத்திலதானே வேலை செய்யிறாள், அதாவது உங்களுக்கு நினைவிருக்கோ, அதுதான், உங்கட கவிதைகளைப் பாராட்டி, அலுவலக முகவரிக்குத்தான்  வந்ததாம், உங்களிட்ட சேர்ப்பிக்கமுடியுமா எண்டு கேட்டுத்தான் எழுதியிருக்கினமாம், அங்க உடைச்சுப் பாத்திட்டு, பத்திரிகையாசிரியர்தான் குடுத்து விட்டிருக்கிறார்"   

"அட...என்னடா சொல்லுறாய், என்ர கவிதைக்கு பாராட்டோ?"

"ஓமண்ணா, தங்கச்சி சொன்னவள், யாரோ பல்கலைக்கழகத்தில படிக்கிற பெடியன் எழுதியிருக்காம்,"

"தாடா  பாப்பம், எனக்கு சந்தோசமா கிடக்கடா" 

"இந்தாங்கோ அண்ணா"

கடித்ததைப் பிரித்த வெற்றிக்குள் ஏதோ ஒரு பரவசம் ஓடியது. அவனது எழுத்துக்களுக்கான முதல் பாராட்டு இது, அவனது வாசகன் ஒருவனிடம் இருந்து வந்திருக்கிறது, அவனது கவிதைகள் பிடித்துப்போன ஒரு ஜீவனின் சாட்சிப்பத்திரம் அது, கைகள் நடுங்கியது, அவனுக்கு அது புதுமையான அனுபவமாக இருந்தது. ஏனோ, மனம் படபடத்ததை அவனால் உணரமுடிந்தது. 

அன்புள்ள வித்தகன், 

உங்கள் கவிதைகளைப் படித்தேன், சுமார் இருபது கவிதைகள் வரை சேர்த்துவைத்திருக்கிறேன், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக வலிக்கிறது, வலிகளைக் கவிதைகளில் வடிக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன், கோடி வாழ்த்துக்கள் உங்களுக்கு.....தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!!!!!!

என எழுதியிருந்தது. வாசித்து முடித்தபோது அவனுக்குள் ஒருவித பரவசம் ஊடுருவியது. கவிதைகளை அவன் நேசிப்பவன்தான், ஆனால்  இதுவரை யாரும் இப்படி அவனைப் பாராட்டியதில்லை. நின்று கருத்து கேட்கும் நிலையில் அவன் இருக்கவும் இல்லை. 

சிறை வாழ்க்கையில் அவன் மனதில் மகிழ்ச்சி மத்தாப்பூ பூத்த தருணமாய் மாறிப்போனது அந்த நொடி. 

சவால்களும் சாதனைகளுமாய் மாறிப்போன வாழ்க்கையில் இப்படி ஒரு தருணம் அவனுக்கு அமையவே இல்லை. 

மீண்டும் மீண்டும் அக்கடிதத்தைப் படித்தவன், கடைசியில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை பார்த்ததும் ஒரு விடயத்தைப் புரிந்துகொண்டான். 

இந்தக் கடிதம் ஒரு பெண்ணால் எழுதப்பட்டிருக்கிறது......



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.