வவுனியாவில் உயிரிழந்த 7 வயது சிறுவன்!
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் 10 வயதான சிறுவன் ஒருவரை பொலிசார் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் ப.அபிசாந் (7) என்பவரே அயல்வீட்டுக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு சென்று படித்து விட்டு வருவதாக தெரிவித்து சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த சிறுவனின் புத்தகப்பை, விளையாட சென்ற வீட்டு மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டது.

இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், விளையாட சென்ற வீட்டு கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

மாணவனுடன் விளையாடிய சக மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்த இருவர் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாகவும், விளையாடிக் கொண்டிருந்த போது நாயுடன் தடக்குப்பட்டு மாணவன் கிணற்றில் விழுந்ததாகவும், இதனால் அச்சமடைந்து புத்தகப்பையை வெளியில் வீசிவிட்டு வகுப்பிற்கு சென்றதாகவும், வகுப்பு முடிந்து திரும்பி வந்தபோது மாணவனின் உடல் நீருக்குள் மூழ்கியிருந்ததாகவும், யாருக்கும் சொல்லாமல் இருந்து விட்டதாகவும் முரண்பாடான தகவல்களை குறித்த மாணவன் தெரிவித்தார்.

இதையடுத்து, மேலதிக விசாரணைக்காக சிறுவனை பொலிசார் பொறுப்பேற்றுள்ள நிலையில் குறித்த மாணவன் இன்று அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.