பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டம் ஒத்திவைப்பு!


மட்டக்களப்பு, மண்முனைப்பற்றுப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கான இன்றைய கூட்டம் நீதிமன்ற உத்தரவிற்கமைய உள்ளுராட்சி ஆணையாளரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு அறிக்கை இரு தடவைகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சபையின் தவிசாளர் பதவி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் பதில் தவிசாளர் நியமனம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மண்முனைப்பற்றுப் பிரதேச சபை உட்பட சில உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர் தெரிவு தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியீடு மேற்கொள்ளப்பட்டது.

அவ்வர்த்தமானியின் அடிப்படையில் நேற்றைய தினம் மண்முனைப்பற்றுப் பிதேச சபைக்கான தவிசாளர் தெரிவுக் கூட்டம் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறவிருந்தது.

இருப்பினும், மேற்படி வர்த்தமானியினை எதிர்த்து மேற்படி சபையின் நடப்பு தவிசாளரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மேற்படி சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்தவகையில், நேற்றைய தினம் மண்முனைப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் சபை அமர்வு இடம்பெற்றது.

இதன்போது உள்ளுராட்சி ஆணையாளரால் மேற்படி நீதிமன்ற உத்தரவு தொடர்பில் சபையில் தெரிவிக்கப்பட்டதோடு, அவ்வுத்தரவிற்கு அமைவாக எதிர்வரும் 23ம் திகதி வழக்கு விடயங்களின் பின்னர் நீதிமன்றத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தவிசாளர் தேர்வு தொடர்பிலும், அதற்கான சபை அமர்வு தொடர்பிலும் அறிவிக்கப்படும் என்று உள்ளுராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.