நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுன் ஏற்பாட்டில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறித்து இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் இணக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்ததொரு சாதகமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆகவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு குறித்த விடயத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சம்பள நிர்ணய சபையிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் நாளை, சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகையதொரு சூழ்நிலையிலேயே இ.தொ.கா.வின் பொதுசெயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், அதன் ஆரம்பகட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள நிர்ணய சபைக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடாக இன்று அமைதியான ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை