ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பும் ஸ்டீபன் ராப்!


சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதி, சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான தேடல் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஸ்டீபன் ராப் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிகவும் வலுவானதொரு அறிக்கையை தயாரித்துள்ளார்.

அதற்கு எனது வரவேற்பினையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை சாட்சியங்களின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான ஆவணப்படுத்தல்கள் செய்ய வேண்டியதும் அவசியமானதாகும்.

மேலும் புள்ளிகளை இணைக்கும் வகையிலான ஆவணங்களை தயாரிப்பதும் அவற்றை நீதிக்கான செயற்பாட்டின்போது பொருத்தமான வேளைகளில் பயன்படுத்துவதும் முக்கியமாகின்றது.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போரின்போது படையினரிடத்தில் சுமார் 260 பேர் வரையில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் சரணடைந்துள்ளமைக்கு சாட்சியமாக அவர்களின் உறவினர்கள் இருக்கின்றார்கள்.

முரண்பாட்டு வலயத்தில் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதற்கான வலுவான சான்றுகளும் உள்ளன.

ஆகவே சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதன்போது அவர், மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர் உள்ளிட்ட வெவ்வேறு வார்த்தைகளையே பயன்படுத்தினார்.

அதாவது சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல, சிறுவர்கள் கடத்தப்படுவது, பேருந்துகளில் படுகொலை செய்யப்படுவது மிகவும் மோசமான சம்பவங்களாகும். அவற்றுக்கும் வலவான ஆதாரங்கள் உள்ளன.

ஆகவே அவை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.