யாழ் தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்!

 


கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

“கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோரின் சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.

“எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இதேபோன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் இடமாக இரணை தீவை அடையாளப்படுத்தி அங்கு சடலங்களை புதைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியடப்பட்டதை அடுத்து இரணை தீவு மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன்.

இதன் காரணமாக கடந்த இரு நாட்களில் ஓட்டமாவடியில் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் இவ்வாறு உயிரிழந்த 16 ஜனாசாக்களை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இரணை தீவு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா சடலங்களை புதைக்கும் முடிவில் இருந்து அரசு உத்தியோகபூர்மாக இதுவரை விலகவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.