ஒலிவியேர் டசால்ட்டிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்!

 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவியேர் டசால்ட் மறைவு மிகப் பெரிய இழப்பு’ என பதிவிட்டுள்ளார்.

ஏஎஸ்350 ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த 69 வயதான ஒலிவியேர் டசால்ட், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானங்கள், ஃபால்கன் ஜெட் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவனம், லி ஃபிகாரோ பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை சொந்தமாக கொண்ட செல்வாக்கு மிகுந்த குடும்பத்தின் வாரிசு ஆவார்.

டசால்ட் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த இவர், பிரான்ஸின் குடியரசு கட்சி சார்பில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். அத்துடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்திருந்தார்.

நார்மண்டி பகுதிக்கு உட்பட்ட டோவில்லில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஒலிவியேர் டசால்ட் மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.