அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

 டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விளைவுகள் குறித்து ஆரம்ப செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகவும், அதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் டென்மார்க்கின் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டென்மார்க்கின் நகர்வைத் தொடர்ந்து அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்துவதாக நோர்வே இன்று அறிவித்துள்ளது.

இந்த முடிவு முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநர், ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்த உறைவு குறித்த அறிக்கை முன்வைக்கப்படாத நிலையில், ஆஸ்திரியாவும் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை ஏற்கனவே நிறுத்தியுள்ளதுடன், இரத்த உறைவு மற்றும் நுரையீரல் அடைப்பினால் ஏற்பட்ட மரணம் குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மனிதர்களிடையேயான பரிசோதனைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என அஸ்ட்ரா செனேகா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.