திரிமான்ன - ஓசதவின் வலுவான இணைப்பாட்டம்!
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சுற்றுலா இலங்கை அணி 153 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.
இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 69.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று ஆரம்பிக்க மேற்கிந்தியத்தீவுகள் அணி மொத்தமாக 103 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் ராகீம் கார்ன்வால் 61 ஓட்டங்களையும், ஜோசுவா தசில்வா 46 ஓட்டங்களையும், கைல் மேயர்கள் 45 ஓட்டங்களையும் மற்றும் ஜோன் காம்ப்பெல் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சாமர மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகைளயும், லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந் நிலையில் 102 ஓட்டங்களினால் பின்னிலை வகித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் (திமுத் கருணாரத்ன - 03) 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த லஹிரு திரிமான்ன - ஓசத பெர்னாண்டோவின் இணைப்பாட்டம் வலுவான இலக்கினை எட்ட இலங்கை அணிக்கு கைகொடுத்தது.
அதன்படி இவர்கள் 162 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
இந் நிலையில் 56.1 ஆவது ஓவரில் ஓசத பெர்னாண்டோ 11 பவுண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட, அடுத்து வந்த தினேஷ் சந்திமலும் 4 ஓட்டத்துடன் வெளியேறினார்.
அவரின் வெளியேற்றத்தின் பின்னர் ஆரம்ப வீராக களமிறங்கிய லஹிரு திரமான்னவும் 76 ஓட்டங்களுடன் கேமர் ரோச்சின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
அதன் பின்னர் தனஞ்சய டிசில்வாவும், பதும் நிஷாங்கவும் 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து ஆடிவர, மூன்றாம் நாள் ஆட்டமும் நிறைவுக்கு வந்தது.
மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை 86 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 255 ஓட்டங்களை குவித்து, 153 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.
ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 46 ஓட்டத்துடனும், பதும் நிஷாங்க 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.
கருத்துகள் இல்லை