இங்கிலாந்தை வீழ்த்தி கோலிப்படை அசத்தல்!


 முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க்வுட்டும், சாம் கர்ரனின் பந்து வீச்சினை எதிர்கொண்ட அவர்கள், ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்த‍ை வெளிப்படுத்தினர். 

அதனால் முதல் 10 ஓவர்களில் அவர்கள் 39 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களை (15.1 ஓவர்) எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 28 ஓட்டங்களுடன் பென் ஸ்டோக்கின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் அணித் தலைவர் விராட் கோலி களம் புகுந்தார். 

தவான்- கோலி ஜோடியினர் சீரான வேகத்தில் துடுப்பெடுத்தாடினர். ரன்ரேட் ஏறக்குறைய 5 இல் நகர்ந்தது. தனது 61 ஆவது அரைசதத்தை கடந்த கோலி 32.2 ஆவத ஓவரில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது 6  ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுமுனையில் தனது 18 ஆவது சதம் நோக்கி பயணித்த தவான் 38.1 ஆவது ஓவரில் மொத்தமாக 106 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 98 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரின் வெளியேற்றத்த‍ை அடுத்து களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியாவும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இதன்போது இந்தியா 40.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் காப்பாளர் லோகேஷ் ராகுலும், குருணல் பாண்டியாவும் 6 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்தனர். 

இருவரும் துரிதமான ஓட்ட சேகரிப்பில் கவனம் செலுத்தினர். அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்துகளை வீசி திணறடிக்கும் வியூகத்துடன் செயல்பட்ட இங்கிலாந்தின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர். 

சாம் கர்ரனின் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய குருணல் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் வுட், டாம் கர்ரனின் ஓவர்களில் சிக்ஸர்களையும் பறக்க விட்டார். 

ராகுலும் ஏதுவான பந்துகளை துரத்தியடிக்க தவறவில்லை. இதனால் ஓட்ட எண்ணிக்கை எதிர்பார்ப்பையும் மிஞ்சி 300 ஓட்டங்களை கடந்ததுடன் இருவரும் அரைசதம் கடந்தனர்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட இழப்புக்கு 317 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் குருணல் பாண்டிய 31 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும், ராகுல் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

318 என்ற வெற்றியிலக்கை இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது. ஜேசன் ரோயும், ஜோனி பெயர்ஸ்டோவும் இந்திய அணியின் பந்து வீச்சுகளில் அதிரடி காட்டினர்.

குறிப்பாக இந்தியாவின் புதுமுக வீரர் பிரசித் கிருஷ்ணாவின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டியடித்து திகைப்பூட்டினார் பெயர்ஸ்டோ.

11.3 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்று 100 ஓட்டங்களை தொட்டது. 

இந்தியாவை அதிர வைத்த இந்த ஜோடியை ஒரு வழியாக பிரசித் கிருஷ்ணா பிரித்தார். ஓட்ட எண்ணிக்கை 14.2 ஓவர்களில் 135 ஆக இருந்தபோது ரோய் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களுடன் சூர்யகுமார் யாதவ்விடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த பென் ஸ்டேக்ஸும் ஒரு ஓட்டதுடன் பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் இயன் மோர்கன் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஜோனி பெயர்ஸ்டோ 66 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ்விடம் பிடிகொடுத்தார்.

அதன் பிறகு ஆட்டம் படிப்படியாக இந்தியா பக்கம் திரும்பியது. 

இறுதியில் இங்கிலாந்து 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை எடுத்து, 66 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சல் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகயைும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், குருணல் பாண்டியா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

2 ஆவது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.