மீண்டும் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும்!


 கிரிக்கெட் விளையாட்டில் கடந்த காலங்களில் காணப்பட்ட கூட்டு உணர்வினை தற்போது நடைமுறைப்படுத்தினால் மீண்டும் உலக கிண்ணத்தை வெல்ல முடியும்.

வரலாற்று சம்பவங்களை ஒரு படிப்பனையாக கற்றுக் கொண்டால் கிரிக்கெட் அணி சிறந்த முறையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெறும். அனைத்து தரப்பினரும் கூட்டு உணர்வுடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை  உலக கிண்ணத்தை வென்று 25 வருட காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்துவம் வகையில்  அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற தேசிய கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக கிண்ணத்தை வென்று 25 வருடங்கள் நிறைவுப் பெற்றிருந்தாலும்.இன்று வெற்றிப் பெற்றதை போன்ற ஒரு மனநிலை தோற்றம் பெற்றுள்ளது.

எமது கிரிக்கெட்  அணியினரது நிலைமையினால் இவ்வாறான வெற்றியை என்றும் நினைவுப்படுத்த வேண்டும்.

நிகழ்காலத்தை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள இறந்தகால நிகழ்வுகள் அவசியமானதாக உள்ளன.

இலங்கை அணி வீரர்கள் அன்று மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை வெறும் விளையாட்டாக மாத்திரம் கருதி விளையாடவில்லை.தாய் நாட்டினை முன்னிலைப்படுத்தி விளையாடியதை அவர்களின் செயற்பாடுகள் ஊடாக அறிய முடிந்தது. இலங்கை உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்று ஆசிய நாடுகள் ஏதும் எதிர்பார்க்கவில்லை.

இலங்கையில் இடம் பெறுகின்ற உலக கிண்ண போட்டியில் விளையாட ஆவுஸ்ரேலியா,தென் ஆப்ரிகா, மேற்கிந்திய  தீவுகள் அணி, பங்களாதேஷ் ஆகிய நாடுகள்  மறுப்பு தெரிவித்தன.

அக்காலக்கட்டத்தில் இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றதால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான தன்மையில் காணப்பட்டது. இதனை காரணம் காட்டி பல நாடுகள் இலங்கையை புறக்கணித்தன.

இலங்கையின் துறைமுகம், விமான நிலையம் ஆகியவை பாதுகாப்பற்ற மையங்களாகவும், இலங்கை சுற்றுலாவிற்கும், சாதாரண பயணத்திற்கும் பாதுகாப்பற்ற நாடாக சர்வதேச மட்டத்தில் சித்தரிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் ஆசிய நாடுகள் இலங்கைக்கு நேச கரம் நீட்டின.இந்நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு வந்தமை  எமக்கு பாரியதொரு தைரியத்தை அளித்தது.

நாம் உலக கிண்ணத்தை வென்ற போட்டி பாக்கிஸ்தானில் இடம் பெற்றது. அப்போது பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியினரும், பாக்கிஸ்தான் அரசாங்கமும் இலங்கை அணியினருக்கு தைரியத்தையளித்தன.

அன்று இலங்கை பெற்ற வெற்றியை ஆசிய நாடுகள் மாத்திரமல்ல உலக நாடுகள் ஏதும் எதிர்பார்க்கவில்லை.

அதுமாத்திரமல்ல முரளிதரன் பந்து வீசும் போது அவரை  மைதானத்தில் இருந்து வெளியேற்ற பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்போது முன்னாள் அணிதலைவர் அம்முயற்சிகளை தோற்கடித்தார்.இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கை கிரிக்கெட் அணியை அப்போது பலப்படுத்தியது.கடந்து வந்த பல நெருக்கடிகள் முத்தையா முரளிதரனை உலகின் சிறந்த விளையாட்டு வீரராக மாற்றியமைத்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை  என்றும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் கடந்த கால  நிகழ்வுகளை ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும். உலக கிண்ணத்தை கைப்பற்றிய போது கிரிக்கெட் அணியினர் மத்தியில் இருந்த கூட்டு உணர்வு தற்போது காணப்பட்டால் மீண்டும் உலக கிண்ணத்தை வெல்ல முடியும். என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.