இருவேறு விபத்துக்களில் நால்வர் பலி!


 மினுவாங்கொட - ஊரிகஹா பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு நபர்களை அழைத்துச் சென்ற பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரிகஹா பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் , குருணாகலை பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நபர்களை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திவுலபிட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது , தனிமைப்படுத்தலுக்காக பஸ்ஸில் அழைத்து செல்லப்பட்ட நபர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை , யாழ் - கண்டி ஏ 9 வீதியில் , லொறியுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தந்தை மற்றும் அவருடைய இரு மகன்மாரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் - கண்டி பிரதான வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் , யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் , கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த கார் சாரதி மற்றும் காரில் பயணித்த அவருடைய இரு மகன்மாரும் பளை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். பளை - தர்மகேணி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரும் 11 மற்றும் 14 வயதுடைய அவரது மகன்மாரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்தின் பின்னர் ரிப்பர் சாரதி தலைமறைவாகியிருந்த நிலையில் , அவர் இன்று சனிக்கிழமை பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.