நாடகம் போடுகிறது ராஜபக்ஷ அரசு!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எந்த அடிப்படையில் மேற்கொண்டது என்பது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் முழுமையான தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது.

ஒரு நாடு - ஒரு சட்டம் என்பதை உறுதியாக பின்பற்றுதாக குறிப்பிட்டவர்கள், சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர்.

தேசப்பற்று, ஒரு நாடு, ஒரு சட்டம் ஆகியவை அரசாங்கத்திற்கு வெறும் தேர்தல் கால பிரசாரம் என்பதை பெரும்பான்மை மக்கள் இனியாவது புரிந்துக்கொள்ள வேண்டும்.

பொதுத் தேர்தலில் அரசாங்கம் பௌத்த சிங்கள மக்களை கவர்வதற்காக ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற விடயத்தை பிரசாரமாக்கி அதில் பயன்பெற்றுக்கொண்டது.

கொரோனா தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என துறைசார் வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்தும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

உடல்கள் தகனம் செய்யப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது - இது உறுதி என்று பலமுறை ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக்கொண்டார்கள்.

இதனைக் கொண்டு சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்தது.

எனினும் உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் ஏன் திடீரென எடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது.

நாட்டின் இறையாண்மை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். நாட்டு மக்கள் இனியாவது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.