வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்!

 


இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது...

''கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இணையவழி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மாதமும் அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தினர். 

அதன்போது, இலங்கையில் சமத்துவம், சமாதானம், நீதி ஆகியவற்றை விரும்பும் அந்நாட்டு தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.  

அந்நாட்டு அரசியலமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தி சமரசத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே நடைபெற்ற சந்திப்புகளின்போதும், இலங்கையில் சமரச நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் நீண்டகால ஆதரவு இருப்பதை இந்தியா சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் அழுத்தமாக எடுத்துரைத்தார். 

ஒற்றுமையான இலங்கையில் கண்ணியத்தை விரும்பும் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்' என அமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.