சொக்லேற் கனவுகள் 28 - கோபிகை!!

 


அது ஒரு 

அதிகாலைப் பொழுது.

வேளையோடு போகவேண்டும்

என்பதற்காய்

காலைப்பயிற்சி முடித்து

குளிக்கச்சென்றான் ஆதி.


தூவலாய் விழுந்த

நீரின் ஒலியோடு

அவன் வாயும்

பாடலொன்றை 

உதிர்த்துக்கொண்டிருந்தது.


சத்தமில்லாமல் 

மெல்லிய காலடிகளோடு

அவன் அறைக்குள்

நுழைந்தாள் அனுதி. 


அங்குமிங்கும் நடந்தாள்,

எதையெதையோ மாற்றினாள்,

புத்தகங்களை அடுக்கினாள்,

உடைகளை மடித்தாள்.


வேலை முடித்து 

அவள் வெளியேற நினைக்க,

கதவு திறந்தது,

வியப்பில் விரிந்தன

ஆதியின் விழிகள். 


அவசரமாய் நகர 

முற்பட்டவளை

"ஏய்.....ஓடாத..."

கண்டிப்பான 

அவன் குரல் தடுத்தது. 

அவனுக்கு முதுகாட்டி

நின்றபடியே,

உதட்டைச் சுழித்து

நாக்கை கடித்து

கண்களைச் சிமிட்டியவள். 


"பாவம்..நாக்கு

ரொம்ப கடிக்காத...."

அவனுடைய கேலியில்

விருட்டென்று 

திரும்பினாள். 


"ஏய்....ஏஞ்சல்....

என்ன ...அதிகாலையிலயே,

ஐயா....அறையில

என்ன செய்கிறாய்?"

கேட்டபடி கண்களைச் 

சிமிட்டினான். 


என்ன பாட்டு,

எந்த ராகம்

என்பதெல்லாம் தெரியாது

இழைந்தன 

அவர்களிடையேயான 

அன்பின் ஸ்வரங்கள்....


அப்போதுதான் 

பார்த்தான் ஆதி....

தலையணை முதல்

பேனா தாங்கிவரை

அத்தனையும் மாறியிருந்தது. 


விழிகளில் வினாவோடு

தன்னவளை ஏறிட்டான்.

"இந்த அறையில,

நீ தொட்டு புழங்கிற

அத்தனையும்

நான் என் கையால

செய்ததா இருக்கணும்,

அதான் மாத்திட்டன்"

என்றாள். 


அன்பு சுரந்த

பூ ஒன்றின் வாசம்

அவன் நெஞ்சிற்குள்

நுழைந்து இதம் தந்தது. 

சற்றே தூக்கலாய்

இனிப்பிட்டு

வாசத்தோடு சேர்மானமிட்ட

பால்பாயாசம் போல

இனிமை சுரந்தது

அவர்களின் இதயங்களில்....


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.