'தி பேமிலி மேன் 2’ , இணையதொடர் - சீமானின் பரப்பரப்பு அறிக்கை!

 


தமிழர்களுக்கு எதிராக வெளியாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை, சட்ட ரீதியாக தடை செய்ய களமிறங்கி போராடுவோம். ஜனநாயகப்பூர்வமாக அதைத்தடுத்து நிறுத்துவோம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது,


"தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன். அறத்தின் வடிவமாய், ஒழுக்கத்தின் உருவமாய், கண்ணியத்தின் தோற்றமாய்க் களத்தில் நின்று, இலட்சியத்தை முழுதாய் நெஞ்சிலேந்தி, நச்சுக்குண்டுகளின் கொடும் தாக்குதல்களுக்கு ஆட்பட்டப்போதும் தடம்பிறழாது தனது பாதை மாறாது, மரபுவழிப்போரையே முன்னெடுத்து, இறுதிவரை போர் மரபுகளையும், மனித மாண்புகளையும் கடைப்பிடித்துச் சமரசமற்று சண்டையிட்ட தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தோற்றம் கொள்ளச்செய்து காட்சிப்படுத்தியுள்ள இத்தொடர் மிகுந்த உள்நோக்கம் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது. தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும், அனைத்துலக நாடுகளும் கூட்டுச்சேர்ந்து ஒருமித்து ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலையில் 2 இலட்சம் தமிழர்களைச் சாகக்கொடுத்துவிட்டு அதற்கான எந்த நீதியையும் பெற முடியா கையறு நிலையில், உலக அரங்கில் தமிழர்கள் கூக்குரலிட்டுப் போராடிக்கொண்டிருக்கையில் தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச்செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களைக் கொண்டுள்ள இதுபோன்ற இணையத்தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும். இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.


ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச்சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம். போர் மரபுகளுக்கு மாறாக ஒற்றை நகர்வையும் முன்வைத்திடாது, அழித்தொழிக்கப்படும் நாள்வரையிலும்கூட சிங்களர்களின் அந்நிய ஆதிக்கத்துக்கெதிராக மட்டுமே போராடி, சிங்கள மக்களைக் குறிவைக்காது, தமிழர்களின் அறத்தையும், மறத்தையும் நிலைநாட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புப் பேரரணாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும், தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் மிகத்தவறாக உலகத்தினருக்குக் காட்ட முற்படும் இத்தகைய இணையத்தொடரை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது. முதல் பாகத்தில் இசுலாமியர்களையும், இரண்டாவது பாகத்தில் இப்போது தமிழர்களையும், மூன்றாவது பாகத்தில் வங்காளிகளையுமெனத் தொடர்ச்சியாக தேசிய இனங்கள் மீதும், இம்மண்ணின் மக்கள் மீதும் உண்மைக்கு மாறான திட்டமிட்ட அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்பொய்களைக் காட்சிகளாக உருவாக்கி, வரலாற்றுத்திரிபுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வரும், ‘தி பேமிலி மேன்’ இணையத்தொடரை முற்றாகத் தடைசெய்யவும், நிறுத்தவும் செய்ய வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.



ஈழத்தில் நடைபெற்ற தமிழர் இனஅழிப்புப்போரை, இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களிடையேயும், அவர்களின் பிரதிநிதிகளிடையேயும் எடுத்துரைத்து அநீதிக்கெதிரான களத்தில் எங்களோடு மற்றமொழிவழி தேசிய இன மக்களையும் இணைத்து, கரம்கோர்த்து நிற்க, எங்களுக்கான ஆதரவுத்தளத்தை மாநிலங்களைக் கடந்து இந்தியாவெங்கும் உருவாக்கும் முன்முயற்சியில் இறங்கியிருக்கிற வேளையில் அதனை முற்றாகத் தகர்த்து, ஈழ விடுதலைப்போராட்டம் குறித்து மிகத் தவறான புரிதலை மற்ற இனங்களிடையே உருவாக்கி, எம்மினத்தின் விடுதலைப்போரை வன்முறை வெறியாட்டமாகவும், பயங்கரவாதப்போராகவும் காட்ட முனைகிற செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய இணையத்தொடருக்கு தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக் கோரியும்கூட அதனை ஏற்காத மத்தியில் ஆளும் பாஜக அரசின் நயவஞ்சகச்செயல் அப்பட்டமான தமிழர் விரோதப்போக்காகும்.


ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை முற்றாகத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யாவிட்டால், சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் அதற்கெதிராகக் களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.