அட்டாளைச்சேனை சம்சுதீன் நியாஸ் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக நியமனம்!

 


இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பதவிநிலை மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனை சம்சுதீன் நியாஸ் (ADDITIONAL DIRECTOR GENERAL) பதவி உயர்வு பெற்றார்.

இதுவரை சுங்கத்திணைக்களத்தில் சிரேஷ்ட பணிப்பாளராக இருந்த ஜனாப் சம்சுதீன் நியாஸ் மேலதிக டிரக்டர் ஜெனரலாக (ADG) பதவி ஏற்கின்றார் . வெளிமாகாணங்களின் சுங்கப் பணிப்பாளராகவும் , சுங்கத்திணைக்கள நீதித்துறை பிரிவின் பிரதானியாகவும், பயணிகள்சேவை பிரிவின் பிரதானியாகவும் கடமையாற்றிய இவர் சுங்க இலாகாவில் முப்பத்தி ஏழு வருடங்களுக்கு மேலான அனுபவம் உடையவர். அத்துடன் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரும், பொத்துவில் முதல்வர் மர்ஹும் டாக்டர் ஜலால்தீனின் முத்த சகோதரரும் , அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முதல் பட்டதாரியும் ,கல்வியின் முன்னோடியுமாக போற்றப் பட்ட மர்ஹூம் சம்சுதீன் (BSc), ரகுமத்தும்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரான இவர் , சட்டமானி (LLB ), சட்ட முதுமானி (LLM ) ஆகியவற்றில் சிறப்பு பட்டங்களைப் பெற்ற ஒரு சட்டத்தரணியுமாவார் .

தனது ஆரம்பக் கல்வியை அல் முனீரா வித்தியாலயத்திலும் , அதன் பின்னர் சிறிதுகாலம் அட்டாளைச்சேனை மகாவித்தியாலயத்திலும் (தற்போதைய தேசிய பாடசாலை ) கல்விகற்று பின்னர் தனது தந்தையுடன் யாழ்ப்பாணம் சென்று ஆறாம் வகுப்பிலிருந்து உயர்தரம்வரை யாழ் / தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்விகற்றார் .

1983 ம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப் பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சுங்க அதிகாரியாக 1984 ம் ஆண்டு நியமனம் பெற்ற இவர் , அதன் பின் படிப்படியாக முன்னேறி தற்போது மேலதிக பணிப்பாளர் நாயகமாக ( ADDITIONAL DIRECTOR GENERAL ) பதவி உயர்வு பெற்றிருக்கிறார். "CASE LAWS OF CUSTOMS" எனும் நூலின் ஆக்கதாரியான இவர் உத்தியோக ரீதியாகவும், திணைக்களத்தின் பிரதிநிதியாகவும் , நாட்டின் பிரதிநிதியாகவும் வெளிநாட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டுள்ளார்.

    விளையாட்டு வீரரான இவர் பாடசாலை காலங்களில் மெய்வல்லுனர் போட்டிகளிலும் ,ஹாக்கி ,கிரிக்கட் , செஸ் விளையாட்டுகளிலும் பங்கு பற்றி விளையாடியுள்ளார். அட்டாளைச்சேனையின் கிரிக்கட் கிளப்பின் (ACC ) ஆரம்ப உறுப்பினரான இவர் தனது சகோதரர் டாக்டர் கியாசுதீன் அவர்களின் தலைமை யின்கீழ் விளையாடி பல வெற்றிகளை குவிக்க காரணமான அன்றைய வீரர்களின் ஒருவராவார்.

கலை , இசை , எழுத்து ஆகியவற்றில் நாட்டமுடையராக காணப்படுவதுடன் பொதுச் சேவையிலும் ஈடுபட்டு வருவதுடன் அட்டாளைச்சேனை அபிவிருத்திச் சபையின் (ADS ) உப தலைவராக பதவி வகுக்கும் இவர் , அச்சபையினூடாகவும் , தனிப்பட்டரீதியாகவும் தனது சேவைகளை தான் பிறந்த மண்ணிற்கு வழங்கி வருகின்றார் . மேலும் சுங்க இலாகாவில் சிறுபாண்மை அதிகாரிகளின் எண்ணிக்கை அருகி வருகின்ற இவ்வேளை தற்போது பதவிவகிக்கும் சுங்கச் சேவை ( UCS ) யிலுள்ள முஸ்லீம் அதிகாரிகளில் அதி உயர் பதவியில் இருப்பவர் நியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.