கே.டி.ராகவனை கைது செய்ய வேண்டும்


 பாலியல் வீடியோவில் சிக்கிய கே.டி.ராகவனை கைது செய்திட வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் 

தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பெண் ஒருவரிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதும் சைகை காட்டுவதும் ஸ்டிங் ஆபரேஷனாக வீடியோ பதியப்பட்டு  (ஆகஸ்டு 24) யு ட்யூபரும் பாஜகவை சேர்ந்தவருமான மதன் ரவிச்சந்திரனால் வெளியிடப்பட்டது.

இதையடுத்து தனது பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். இதை சட்டப்படி சந்திப்பேன்”என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை கரூர் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணி சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கே அவர் அளித்த புகாரில், “ பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் என்பவரின் பாலியல் அத்து மீறல் தொடர்பான ஆபாச வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில் குறிப்பாகத் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது அதே கட்சியை சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் திருமதி காயத்ரி தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாகவும் ஏமாற்றி பணம் பறித்த தாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ வெளியானது.

இதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும் பாலியல் வக்கிரத்துடனும் நடந்துகொண்டே வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது தன்னை கடவுள் பக்தர், தனது கட்சியே கடவுளை காப்பாற்ற வந்த கட்சி என்று பொய் பேசி ஊரை ஏமாற்றி வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் பூஜை அறை அருகில் நின்று கொண்டு ஒரு பெண்ணிடம் தகாத முறையில் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு நடந்து கொண்டுள்ளார்.

இதுபோல தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து காப்பாற்றி வருவது மட்டுமல்லாமல் அவர்களை ஊக்குவித்தும் வருகிறது.

இந்த வகையில்தான் கலிவரதன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ஆனார். சண்முகம் சுப்பையா தமிழக ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுரையில் இன்னும் தொடங்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினராக நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

அன்று ஆட்சியில் இருந்த அதிமுக, பாஜகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொள்ளாச்சி வன்கொடுமை போன்ற அதிமுகவின் பாலியல் குற்றங்களை பாஜகவும் பாஜகவின் பாலியல் குற்றங்களை அதிமுகவும் தொடர்ந்து மூடிமறைத்து வந்தனர்.

இதுபோல பல பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சமூகத்துக்கும் பெண்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக வெளியில் உலவிக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் இந்த அவலம் அடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

கே.டி. ராகவன் உள்ளிட்ட பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் பெண்களாகிய நாங்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் தலை நிமிர்ந்து நடக்க முடியும்" இன்று தனது புகாரில் ஜோதிமணி எம்பி குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.