கழநியும் கணினியும் - கவிதை!!

 


பழநிமலை முருகனவன் பெற்றோர் தம்மைப்

     பணியாமல் உலகைவலம் வந்த போல
கழநிதனைப் புறக்கணித்துக் கணினி யொன்றே
     கல்வியெனக் கற்கின்றார் இளைஞ ரெல்லாம் !
உழவுதனைத் துறந்துவிட்டுக் கணினிக் குள்ளே
     உலகத்தைத் தேடுகின்றார் வயிற்றுக் காக
பழம்தன்னை விட்டுவிட்டு காயை உண்ணும்
     பரிதாப நிலைக்கவரைத் தள்ளும் நாளை !

விண்மீது பறப்பதற்கும் அடுத்த கோளில்
     வியக்கின்ற பாடிகாலை வைப்ப தற்கும்
மண்ணிற்குள் மறைந்திருக்கும் வளங்கள் தம்மை
     மண்மீது அமர்ந்தபடி சொல்வ தற்கும்
எண்ணற்ற தொழிற்வாலை இயக்கு தற்கும்
     எட்டியுள்ள நாடுகளை இணைப்ப தற்கும்
வண்ணவண்ண கணினிகள்தான் இருந்த போதும்
     வாய்க்குணவை அளிப்பதற்கே கழநி வேண்டும் !

ஊர்தன்னை மாற்றிடலாம் மாடி கட்டி
     உயரத்தில் அமர்ந்திடலாம்; உவகை கொஞ்சும்
சீர்வாழ்வைப் பெற்றிடலாம்; நாக ரீக
     சிறப்போடு திகழ்ந்திடலாம்; கணினி கொண்டு
பார்தன்னில் புதுமைகளைப் படைத்த போதும்
     பசிக்கின்ற வயிற்றுக்கே உணவாய் ஆமோ
வேர்போன்ற விவசாயம் இல்லை யென்றால்
     வெற்றியெனும் அறிவியலும் வெறுமை தானே !

- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.