விகிதாசார முறைப்படி மாகாண சபைத்தேர்தல் - மக்கள் காங்கிரஸ்!!

 


பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்து நடத்த வேண்டும் என மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி,  சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட்,  சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு, தேர்தல்கள் சீர்திருத்தம்  தொடர்பாக மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பிரேரணையை முன்வைத்தனர்.

அதில் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் விடயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியதுடன், விரிவான நீண்ட நேர கருத்தாடல்களையும் மேற்கொண்டனர்.

மேலும், பொதுத்தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் விகிதாசார முறைப்படி தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்த வேண்டும் என்ற வாதங்களும் மக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அங்கு முன்வைக்கப்பட்டது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் ஆரம்பகாலத்தில் இருந்த விகிதாசார முறைப்படியான தேர்தல் முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும்  இப்பொழுது இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறை நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, விசேடமாக புலம்பெயர்ந்தவர்களினுடைய வாக்குரிமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதில் முக்கியமாக  வடக்கு  மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு, புத்தளம் உள்ளிட்ட இதர மாவட்டங்களிலே வாழ்ந்துவரும், அதாவது இன்னும் தமது சொந்த ஊரிலே குடியேறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும் விஷேட சலுகை அடிப்படையில், அவர்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களிலுள்ள முகாம்களில் இருந்தே, அவர்கள் விரும்பிய தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.