உப்பா? சர்க்கரையா?


ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.

பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணம், ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். அதைப் பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம், ‘என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே... உனக்கு என்னப் பிரச்சனை? என்று கேட்டார்.

பெரியநாயகம் விஷயத்தைச் சொன்னதும், ‘இதற்காகவாக் கவலைப்படுகிறாய். ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு, அங்கேப் போய்த் தள்ளி விடு. போ, வேலையைப் பாரு” என்றான் ராமலிங்கம்.

அவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயனற்றுப் போவோம்!. என்று வருந்தித் தங்களை உற்பத்தி செய்யும் கரும்பிடமும், கடலிடமும் முறையிட்டன.

கரும்பு சர்கரையைப் பார்த்து, “நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட, கல்யாணம் மற்றும் எல்லா வைபவங்களுக்கும் நீ இல்லாமலா, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்க்கரைப் பொங்கலிலும் உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு பிடித்ததும் கரும்புதான், அம்பாள் கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாத பொங்கல் விழாவா?” என்று தைரியம் கூறியது.

அதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. “டேய் உப்பு! என்ன யோசிக்கிரே. நீ இல்லாம ஒரு பண்டமுண்டா. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் என்று எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் நீ தான், “உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்குத் துரோகம் நினைப்பானா என்றுதானே சொல்கிறார்கள்”. உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல வகைகளில் விற்பனைக்கு வந்து விட்டாய். நோய் குணமாகக் கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே. தெரியாதா உனக்கென்ன குறைச்சல்” என்றது கடல்.

ஒரு தினம் பெரியநாயகம் தள்ளாடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, ‘ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டது.

“என் காலில் ஒரு புண் வந்தது. அதுக்கு மருந்து போட்டும் இன்செக்சன் செய்தும் குணமாகலே. டாக்டர் சொல்றார். எனக்கு சர்க்கரை வியாதியாம். இனிப்பு சாப்பிடக் கூடாதாம். அப்போதுதான் புண் குணமாகுமாம்” என்று என்று புலம்பினான் பெரியநாயகம்.

“அதனாலென்ன, இனிமே நீங்க சாப்பிடறதிலே சர்க்கரையை ஒதுக்கிடறேன்” என்று சமாதானப்படுத்தினாள் அவன் மனைவி.

அதைக் கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்க்கரையைப் பார்த்து இளித்தது.

அப்போது ராமலிங்கம் அங்கு வந்தார். அவரிடம் எல்லாவற்றையும் விலாவரியாகக் கூறினார் பெரிய நாயகம்.

அதைக் கேட்ட ராமலிங்கம், கண்ணீர் விட்டார்.

பின்னர், “உன் கதை இப்படி. என் கதை தெரியுமா? நான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர் சோதித்துவிட்டு எனக்கு ரத்தக் கொதிப்பாம், கொழுப்புச் சத்து அதிகரித்து விட்டதாம். சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம். அல்லது அறவேத் தவிர்க்க வேண்டுமாம்” என வருந்தினார்.

இதை செவியுற்ற சர்க்கரை உப்பை ஏளனமாகப் பார்த்தது.

இனிப்பு உப்பைக் கூப்பிட்டு ‘நம்மைப் பற்றி நமக்கேத் தலைக்கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நம் தலையில் குட்டிப் பாடம் கற்பித்தார்” என்றது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.