வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் -தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம்!!

 


வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மௌளவி ஒருவர் கவனயீர்ப்பில் ஈடுபட்டார். 


குறித்த மௌளவி தனது மகளுக்கு சிகிச்சை ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு 

சென்றுள்ளார். இதன்போது பணிபகிஸ்கரிப்பு முடிவடைந்த பின்னரே அந்த சிகிச்சையினை வழங்க முடியும் என்று வைத்தியசாலையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் விரக்தியடைந்த அவர் வைத்தியசாலை வளாகத்தில் தனிநபராக கவனயீர்ப்பில் ஈடுபட்டார்.


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


மருத்துவர்களின் தொடர் பணிபகிஸ்கரிப்பினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். 


குறிப்பாக மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பல்வேறு நோயாளர்கள் தூரப்பிரதேசத்தில் இருந்து வருகைதந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 


தொடர்ச்சியாக  மூன்றாவது நாளாகவும் இந்த புறக்கணிப்பு தொடர்கின்றது. இந்த பி்ரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் கூலித்தொழில் செய்தே வாழ்க்கை நடத்துகின்றனர்.ஒரு நாள் தொழிலிற்கு செல்லாவிடில் அவர்களது குடும்பம் தெருவிலே வந்துவிடும். 


வைத்தியர்கள் தங்களது உரிமையின் அடிப்படையில் இதனை செய்கின்றார்கள். ஆனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு யார் பதில் சொல்வது. மூன்று நாளாக வேலைநிறுத்தம் செய்கிறோம். நோயாளர்களே வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாம் என்று அறிக்கையாவது போடுகின்றீர்களா. அப்படிச்சொல்லுங்கள் நோயாளிகள் வீடுகளிலேயே சாகட்டும். 


இந்தநாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பதில் சொல்ல வேண்டும். மூன்று நாட்களுக்குள் ஒரு தீர்வை எட்டமுடியாதா?, இந்த சந்தர்ப்பத்தில் யாராவது மரணத்தை சந்தித்தால் நீங்கள் மனிதர்களிடத்தில் தப்பலாம். இறைவனிடத்தில் தப்ப முடியாது. 


எனவே மனிதர்களின் உயிரோடு தொடர்புடைய சுகாதாரத்துறையினரின் பிரச்சனைகளை தீர்த்து, ஏழை மக்களின் பிரச்சனையில் கவனம் எடுக்குமாறு இந்த அரசையும் கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.


செய்தியாளர் கிஷோரன். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.