கொழும்பில் திடீரென குவிக்கப்பட்டுள்ள பொலிஸ்!
கொழும்பு நகர் உட்பட மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தல், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேவைப்பட்டால் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் விசேட வீதித் தடைகளை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை கண்காணிப்பதற்காக நேற்றுமுதல் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை அண்டியுள்ள பகுதிகளில் பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலிமுகத்திடல் பகுதியில் விசேட வாகன தரிப்பிடம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணித்தியாலமும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள், வீதி சட்டங்களை மீறுபவர்கள், அதிக வேகமாக வாகனத்தை செலுத்துபவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் சட்டங்களை பிரயோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை