தமிழர்  தரப்பு  குரலாய் இன்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை!!


நான் ஒரு பொருண்மிய நிபுணன் அல்ல. ஆதலால் இந்த நாடு எதிர்கொண்டுள்ள பொருண்மிய நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதுபற்றி நான் இச்சபையில் உபதேசம் செய்யவிரும்பவில்லை.


இருந்தாலும், இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து வெளிவருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை அணுகவேண்டும் என்ற கருத்து புத்திஜீவிகள் மத்தியில் வலுவானதாக உள்ளது என்பது உண்மை. அவ்வாறு செய்வதற்கு முன்னர் இலங்கை மீளக்கட்டமைப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கடன்களை மீளகட்டமைப்பது மட்டுமல்ல, இலங்கையின் அரசகட்டமைப்பை மீள கட்டமைப்பது பற்றியும், எவ்வாறு ஆட்சி நடத்துவது என்பதுபற்றியும் தீர்மானிக்க வேண்டும்.  ஏனெனில் இந்நாட்டை ஆட்சிசெய்யும் முறையிலும் நெருக்கடி காணப்படுகிறது. இந்நடைமுறை யதார்த்ததிலிருந்து ஒருவரும் விலகி ஒடிவிடமுடியாது.


இந்நிலையில், பொருண்மிய விடயத்தில் ஒரு பொது மனிதனாக, வடக்கு –கிழக்கினை பிரதிநிதித்துப்படுத்துகிற ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக சிலவிடயங்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.  மீளகட்டுமானத்தைச் செய்யும்போது இந்த விடயங்களை கவனத்திற்கொள்வது அவசியமானது.

இன்றைய பாதகமான பொருண்மிய நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு இது அவசியமானது என நான் கருதுகிறேன்.


முதலில், நீங்கள்  கடந்தவருடம் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்ட விடயத்தைப் பார்த்தால் 2022ம் ஆண்டிற்கான பாதீட்டில் 14 விழுக்காடு பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதனை காணலாம்.  அவற்றுள் இராணுவச் செலவீனங்களுக்கான ஒதுக்கீடு 12.3 விழுக்காடு 

2021ம் ஆண்டில் இராணுவ செலவீனங்களுக்கான ஒதுக்கீடு 10.56 விழுக்காடு ஆகும்.


2021, 2022 ம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாளதாரம் வீழ்ச்சியடைந்துகொண்டு சென்றிருக்கையில், நடைமுறையில் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றிருக்கையில் பெருந்தொகையான நிதி இராணுவச் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாதுக்காப்புச் செலவீனங்களுக்கு 14 விழுக்காடும் இராணுவத்திற்கு 10 விழுக்காட்டிற்கு அதிகமாக ஒதுக்கப்பட்டிருப்பதும் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதது. குறிப்பாக அமைதி நிலவுகிற காலத்தில் இவ்வாறு நடைபெறுகிறது. அமைதி நிலவுகிறது என்று சொல்லும்போது, ஆயுதமோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த காலங்களில் தமிழ்மக்களாகிய நாங்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்திருந்தோம்.  இப்போது நாங்கள் ஆயுதப்போராட்டம் பற்றிப் பேசுவதில்லை. எங்களுடைய மக்களை ஆயுதங்களைக் கையிலெடுக்குமாறு நாங்கள் கூறுவதில்லை. 


இவ்வாறிருக்கையில் இலங்கை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை இவ்வாறு அதிகரிப்பது  நியாயப்படுத்தமுடியாதது. 


அடுத்த ஐந்து வருடங்களுக்கு இராணுவத்திற்கான ஒதுக்கீடு வருடத்திற்கு 2 விழுக்காடு என்றளவில் அதிகரிக்கும் என  இராணுவ விடயங்களை வெளியிடும் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி என்ற சஞ்சிகை எதிர்வுகூறியுள்ளது. இவ்விடயத்தை அவையிலிருக்கும்  உறுப்பினர்கள், குறிப்பாக இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.


நாடுகளின் பாதுகாப்புச் செலவீனங்களை அவற்றின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது, இலங்கையை விட அதிகமாக செலவிடும் நாடுகளாக அவுஸ்திரேலியா, ஐக்கிய இராட்சியம், இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.  நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை அவற்றின் அரசாங்கச் செலவீனத்துடன் ஒப்பிடும்போது இலங்கையை விட அதிகமாகச் செலவிடும் ஒரே ஒரு நாடு இஸ்ரேல். இஸ்ரேலிலுள்ள நிலவரம் இலங்கையிலுள்ள நிலவரத்துடன் வெகுவாக மாறுபட்டது என்பதனை நாம் அறிவோம். 


இலங்கை இவ்வாறு பாதுகாப்புத்துறைக்கு பெருமளவு நிதியைச் செலவிடுவதற்கு காரணம், நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அல்லது நாட்டில் பிரச்சனைகளை உருவாக்குவதற்காக  வெளியிலிருந்து வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அல்ல. மாறாக இலங்கை அரசு அதன் எதிரிகள் உள்நாட்டிலேயே இருப்பதாகக் கருதுகிறது.  அது தமிழர்களை எதிரிகளாகக் கருதுகிறது, இப்போது முஸ்லீம்களையும் எதிரிகளாகக் கருதுகிறது. அரசாங்கம் பறைசாற்றுகிறபடி தங்களுக்கு வாக்களித்தவர்கள் என்று கூறுகிற சிங்கள மக்களையும் எதிரிகளாகவே காண்கிறது. இவ்வாறான பார்வையில் பாரிய தவறு இருக்கிறது. 


இந்த அரசாங்கமும், எதிர்க்கட்சியும் இவ்வாறு எதிர்ப்புநிலையிலிருந்து அணுகுவதனை விட, தங்களை உரிமையிழந்தவர்களாகக் கருதும் தமிழர்களினதும், முஸ்லீங்களினதும் அச்சத்தை நீக்குவதற்கு முயல்வார்களேயானால் நிச்சயமாக பாதுகாப்புச் செலவீனங்களுக்கு  இவ்வாறு பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அவசியம் ஏற்படாது.


இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும்போது 

இவ்விடயங்களை சிரத்தையுடன் கணக்கில் எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன். இந்த நாட்டில் வாழுகின்ற அனைவரினதும் நலனிற்காக, குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களின் நலனிற்காக  ஒடுக்குமுறையாளராகச் செயற்படும் இராணுவக் கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும்.

ஒடுக்குமுறை என்று சொல்லும்போது பாரிய எண்ணிக்கையில் இராணுவம் அங்கு நிலைகொண்டிருப்பதும் அடங்குகிறது. வடக்கு – கிழக்கில், பதினான்கு மக்களுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில், அதிலும் வன்னியில் ஐந்து மக்களுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.  இது எந்தவகையிலும் ஆரோக்கியமானதல்ல.


தமிழ் மக்கள் மீது பாரதூரமான குற்றச்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், இக்குற்றச் செயல்கள் இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் என தமிழ் மக்கள் திரும்பத்திரும்பக் குற்றஞ்சாட்டுகையில், இன்றிருப்பதுபோன்று  இராணும் நிலைகொண்டிருப்பது ஆபத்தானது. ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு எதிராக குற்றங்களை இழைத்தவர்கள் அவர்கள் மத்தியில் வாழ்வது ஏற்புடையதல்ல. ஆகவே காலங்கடந்து விட்டாலும், அரசாங்கம் தனது பாதுகாப்புச் செலவினத்தையிட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 


பாதுகாப்பு தனித்து இராணுவத்திடம் மட்டுமல்ல. அவர்களிடம் குடிசார் பாதுகாப்புப் பிரிவு என்றும் ஒன்றும் உள்ளது.  அவர்கள் முன்பள்ளி ஆசிரியரகளை பணிக்கு அமைர்த்தியுள்ளனர். ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனமாக 30 ஆயிரம் ரூபாவை வழங்குகின்றனர்.  வடக்கு கிழக்கில், பாலர்கள் தங்களது கல்வியை ஆரம்பிக்குபோதே இந்த இராணுவமயமாக்கலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். முன்பள்ளி கல்விக்கும் இராணுவத்திற்கும் என்ன தொடர்பு? இராணுவம் ஏன் இவ்ற்றில் தலையிடவேண்டும்?  வடக்கு – கிழக்கினைப் பொறுத்தவரை இதுதான் இராணுவத்தின் மனோபாவம். 


சாதாரண முன்பள்ளி ஆசிரியர்கள் 6 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.  அவர்களது நியமனம் நிரந்தரமாக்கப்படவில்லை என அவர்கள் போராடுகிறார்கள்.  இன்று ஆறாயிரம் ரூபா மாத வருமானத்தில் ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா? ஆறாயிரம் ரூபா ஒரு வாரத்திற்குக்கூட போதாாது. அதே ஆசிரியர்கள் குடிசார் இராணுவப் பிரிவினால் நடத்தப்படும் பாடாசாலைகளுக்குச் சென்று கற்பித்தால் முப்பதாயிரம் ரூபாவிற்குமேல் வழங்கப்படுகிறது.


 ஆகவே இங்கு இராணுவத்திற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டமிருப்பது தெளிவாகிறது. இந்த நிகழ்ச்சிதிட்டம் கலைக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கு முன்னர் இதனை மறுசீரமைக்குமாறு அரசாங்கத்தை வேண்டுகிறோம்.  இது நடைபெறாவிட்டால், இதனை ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் வேண்டுகோள் விடுப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.