மக்களுடனேயே நாம் என்கிறார் மைத்திரி

 


அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் மற்றும் கொள்கைகள் காரணமாக  சகல மக்களும் வீதிக்கு இறங்கி, ராஜபக்ஷ அரசாங்கமே வேண்டாம் என்ற கோஷம் எழுப்பிக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மக்களுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்படும் எனவும் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை எனவும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நேற்று இடம்பெற்ற போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் மிக மோசமான  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து அதனுடன் தொடர்புபட்ட சமூக பிரச்சினை உருவாகியுள்ளது. சமூக பிரச்சினை அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த அரசாங்கம் மேற்கொண்ட தவறான தீர்மானங்களின்  காரணமாக இன்று பாரிய பிரச்சினை உருவாகியுள்ளது.

குறிப்பாக உரம் விடயத்தில் எடுத்த தவறான தீர்மானம் அடுத்தடுத்த சகல பிரச்சினைகளிலும்  தாக்கத்தை செலுத்தியது. அதுவே நாட்டு மக்கள் இன்று வீதிக்கு இறங்க காரணமாகவும் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, எமக்கு உதவிய சர்வதேச நாடுகள் இன்று எம்மை புறக்கணித்துள்ளனர், சர்வதேச அமைப்புகள், சர்வதேச நாடுகள் அனைவருமே எமக்கு உதவ தயாராக இல்லை. இந்த அரசாங்கம் பல  தவறுகளை செய்வதனால் எம்மால் உதவ முடியாதென சர்வதேச தூதுவர்கள் என்னிடம்  தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டில்  ஜனநாயகம்,மனித உரிமைகள்,ஊடக சுதந்திரம் பேணப்படும் நிலைமை வெளிப்பட வேண்டும், நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவ்வாறான நிலையொன்று இருந்தால் மட்டுமே  சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இன்றைய  நிலைமை அவ்வாறானதாக இல்லை. நாளுக்கு நாள் நாடு நாசமாக்கிக்கொண்டே செல்கின்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் அதிக காலமாகவே இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் இருந்து விலக  கலந்துரையாடி வந்தோம்.

எனினும் ஏதேனும் ஒரு விதத்தில் எமது யோசனைகளை கொண்டு மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கையில் அதற்கான முயட்சிகளை எடுத்தோம்.

ஆனால் கடந்த ஒன்றரை மாதத்தில் நான்கு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம், தற்போதைய நெருக்கடிக்கு பல்வேறு யோசனைகளையும் முன்வைத்தோம். ஆனால் அவற்றையும் அரசாங்கம் நிராகரித்த காரணத்தினால் தான் அரசாங்கத்தால் இருந்து விலக தீர்மானம் எடுத்தோம்.

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த விவாதத்தில் அரசாங்கம் எதிர்கட்சிகளின் எந்தவொரு கருத்தையும் கருத்தில் கொள்ளாது சபையில் கூச்சல் குழப்பம் விளைவித்ததை மட்டுமே அவதானிக்க முடிந்தது.

அரசாங்கம் மக்களின் செயற்பாடுகளை கருத்தில் கொள்வதாகவே தெரியவில்லை, ஆகவே இந்த நிலைமையில் அரசாங்கத்துடன் எந்தவொரு கணக்குவழக்கும் எமக்கிடையில் இருக்காது, எந்தவொரு எழுத்துமூல இணக்கமும் இருக்காது.

எந்தவொரு விதத்திலும் அரசாங்கத்துடன் தொடர்பை வைத்துக்கொள்ள நாம் தயாரில்லை. அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியதும் போதும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் போதும். இனிமேல் எதற்கும் இடமில்லை.

நாட்டு மக்கள் இன்று முகங்கொடுக்கும் நெருக்கடி நிலையில் இருந்து மக்களை மீட்க வேண்டும்  என்பதே எமது நோக்கமாகும். சகல வர்க்க மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சகல மக்களும் பாகுபாடு இல்லாது வீதிக்கு இறங்கி  ராஜபக்ஷ அரசாங்கமே வேண்டாம் என்ற கோசம் எழுப்பிக்கொண்டுள்ளனர். இந்த மக்களுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்“ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.