நமது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக வடிவமைக்கப் போகிறோமா?

 


பிரதமர் தெரிவில், உள்ளூர் அரசியல் காய்நகர்த்தல்கள் மட்டுமல்ல, வெளிச் சக்திகளின் புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலும் (Geopolitical Agenda) உள்ளது.

புதிய பிரதமர் தெரிவும் புதிய அமைச்சரவை நியமனமும், ஒரு வார காலத்திற்குள் நடந்தேறும் என, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவே முன்னாள் பிரதமர் ரணிலோடு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அரசியல் அரங்கில் பிரதமர் பதவிக்காக அடிபட்ட, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகி, சுயாதீனமாக செயற்படப் போவதாக ஹரீன் பெர்னாண்டோ நேற்றிரவு அறிவித்திருக்கிறார். மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் ஹரீனுடன் அணி சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிளவு அரசியல் வட்டாரங்களில் முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். புதிய ஜனாதிபதியாக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை (கவனிக்க: சஜித்தை அல்ல), ஹரீன் பாராளுமன்றத்தில் பரிந்துரை செய்ததையும், அப்போதே லக்ஷ்மன் கிரியெல்ல அதை மறுத்ததையும் இங்கு சுட்டிக் காட்டலாம். மேதினத்தில் ஹரீனுக்கும் பொன்சேகாவுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும்.
ராஜபக்சக்களுக்கு மிகவும் தோதான ஒரு தெரிவு ரணில்தான். அத்தோடு பிராந்திய - சர்வதேச கூட்டணிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ரணில் மிகவும் ஏற்புடையவர்.
இவ்வாறான அரசியல் அணிச் சேர்க்கைகள், புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபட்டிருப்பதை ஊகிப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.
ஐந்து முறை பிரதமராக இருந்த ரணிலுக்கு, இந்த நெருக்கடி நிலமையைக் 'கையாளக் கூடிய' (கவனிக்க: 'தீர்க்கக் கூடிய' என்று சொல்லவில்லை) திறமையும் நீண்ட அனுபவமும் உள்ளது என்தில் சந்தேகம் இல்லை.
ஆனால், இந்த மக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை திசைதிருப்பும் 'டீல்' அரசியலில், அவரது வகிபாகம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிந்ததுதான். இன்னும் சில வாரங்களில் அது இன்னும் தெளிவாகத் தெரிந்து விடும். ராஜபக்சக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான ஒரு வெளிச்செல்லும் உத்தியை (Exit Strategy) அவர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தியா மற்றும் மேற்கு முகாமினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் நிதியுதவியை வென்றெடுப்பதில் ரணில் வெற்றிபெறுவார் என்பதிலும் சந்தேகமில்லை.
ஒரு வகையில் ரணில் அவசியமானவர். இன்னொரு வகையில் ஆபத்தானவர். இதன் பரிமாணம் பற்றிய ஒவ்வொருவரின் புரிதல் அளவும் வேறுபட்டது. இந்த 'ஆபத்தான அவசியத்தை' இடைக்காலத் தீர்வாகக் கையாளலாம் என்று ராஜபக்சக்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் எண்ணுகின்றன.
இந்த அரசியல் சுழியில் அடிபட்டுப் போகப் போவது சஜித்தான். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை சரியாகச் செய்ய இயலாத தடுமாற்றமும், நெருக்கடி காலகட்டத்திற்கு தலைமை வழங்க முடியாத அவரது இயலாமையும், அவரது அரசியல் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன.
செயல்வேகம் குன்றிய, உயர் பதவிக்கு அவசியமான அறிவாளுமைப் போதாமையுடைய அவரை, பிரேமதாஸவின் மகன் என்பதற்காக மட்டும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அநேகமாக, அடுத்த தேர்தலில் சஜித் மிகவும் பலவீனப்பட்டு நிற்பார். ஐக்கிய மக்கள் சக்தியும் பலவீனமடைந்து விடும்.
இது ஒரு புறம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமடையச் செய்யும். மறுபுறம், ஆட்டம் கண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியை, சுதந்திரக் கட்சி குறி வைத்து இயங்கும். இது அதிகார சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்தப் புதிய அரசியல் நகர்வுகளால், தற்போது நலிவடைந்து பின்தள்ளப்பட்டிருக்கும் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பீட்டளவில் முன்னரங்குக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். அதனால்தான் சந்திரிக்கா தரப்பும் களமாடுகிறது.
இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் அவரது 43 ஆவது படையணியும் சஜித் அணியிலிருந்து ஒதுங்கி, தற்போது அடிபட்டு நிற்கும் சிங்களத் தேசியவாதத்தின் மீட்பராக தம்மை முன்னிறுத்தி இயங்குகின்றனர். அடுத்த பிரதமருக்கான போட்டிக் களத்தில் சம்பிக்கவும் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், இது நாட்டுக்கு மிக ஆபத்தான முன்னெடுப்பு.
இது இவ்வாறிருக்க, பிரதான கட்சிகள் மீதான அதிருப்தி அலையொன்று நாட்டில் பலமாக உருவெடுத்திருக்கிறது. சீரியஸான மாற்றத்தையே இது வேண்டி நிற்கிறது. இதன் பலனை அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்யும் வாய்ப்புகளே அதிகம். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வு இன்னும் விரிவும் வீரியமும் பெற வேண்டும்.
எது எப்படிப் போனாலும்,திசைகாட்டி முன்னெப்போதை விடவும் பெருமளவு ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், புதிய பாராளுமன்றத்தில் அதுவும் ஒரு தீர்மானகரமான சக்தியாக இருக்கும்.
எது எப்படியோ, அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்குப் பின்னர், பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் சாத்தியம் மிக அதிகளவில் உள்ளது. இப்போதுள்ள அரசியல் ஸ்திரமின்மையில் இருந்து வெளியேற அதுவே பொருத்தமான தீர்வாகும்.
புதிய பிரதமர் தெரிவு, அடுத்த தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு நகர்வு என்பதை, அரசியல் நடப்புகளை நன்கு ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
அதனால்தான் புதிய பிரதமராவதற்குத் தயார் என்று ஏகப்பட்ட ஆட்கள் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பலமுனைகளில் துண்டு துண்டாக உடைந்து நிற்கும் அரசியல் தரப்புகளை, தேர்தலின் பின்னர் அணி சேர்க்கும் வேலையை பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் சக்திகள் செய்யும்.
இலங்கை விவகாரத்தில் ஒப்பீட்டளவில் சீனாவின் செல்வாக்கு குறைந்து, இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது என்பது பகிரங்க ரகசியம். தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்குக் கிடைத்த பொன்முட்டையாக ஆகியிருக்கிறது.
இந்த நகர்வுகள் இடைக்காலத் தீர்வாகவே வருகின்றன. அதேவேளை, இவை இறுதித் தீர்வில் தாக்கம் செலுத்த வல்லன.
மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், தமக்கு வாய்ப்பாக வளைத்தெடுக்கவும் பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளதைக் காண முடிகிறது.
எந்த சக்தி வந்து எந்த ஆட்டத்தைப் போட்டாவும், நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறக் கூடாது.
இந்த நாட்டுக்கு ஒரு தீர்க்கமான மாற்றம் தேவை. அது அடிப்படையான முறைமை மாற்றம் (System Change) என்பதில் மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் படிக்கத் தயாரென்றால்தான், நமது தலைவிதியை மாற்ற முடியும். இல்லாவிட்டால் 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான் தொடரும்.
தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து விட்டு நகரப் போகிறோமா? அல்லது நமது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக வடிவமைக்கப் போகிறோமா?
இப்போதைக்கு யார் பிரதமராக வந்தாலும், நாம் காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும்.
சிராஜ் மஷ்ஹூர்
12.05.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.